×

தமிழகத்தில் கொரோனா பரவுவதற்கு கோயம்பேடு வியாபாரிகளே காரணம்: முதல்வர் எடப்பாடி பரபரப்பு குற்றச்சாட்டு

* கோயம்பேட்டில் தொடர்ந்து மார்க்கெட் செயல்பட்டால் தொற்று ஏற்படும் என்று எச்சரித்தும் சங்க நிர்வாகிகள் மறுத்து விட்டனர்.
* சென்னை மாநகராட்சி பகுதியில் மட்டும் 26 லட்சம் பேர் குடிசை பகுதியில் நெருக்கமான, குறுகலான தெருக்களில் வசிக்கின்றனர்.

சென்னை: கோயம்பேடு மார்க்கெட் விஷயத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை, அதனால் கோயம்பேடு பகுதியால் நோய் பரவல் அதிகமாகி விட்டது என்று கூறுவது உண்மையல்ல. அரசு ஏற்படுத்தி தருவதாக கூறிய தற்காலிக மார்க்கெட்டுக்கு செல்ல வியாபாரிகள் மறுத்ததால்தான், கோயம்பேடு மார்க்கெட் மூலம் தமிழகம் முழுவதும் நோய் பரவ காரணமாகி விட்டது என்று முதல்வர் எடப்பாடி கூறினார். தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று சென்னை, தலைமை செயலகத்தில் இருந்தபடி வீடியோ கான்பரன்சிங் மூலமாக ஆலோசனை நடத்தினார்.

இந்த கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், தலைமை செயலாளர் சண்முகம், டிஜிபி திரிபாதி, வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். காலை 9.30 மணிக்கு தொடங்கிய கூட்டம், பிற்பகல் 2 மணி வரை நடைபெற்றது. கூட்டத்தில் அனைத்து மாவட்ட கலெக்டர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்த பின்னர், இறுதியாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது: தமிழகத்துக்கு வெளி மாவட்டங்கள், வெளி நாட்டில் இருந்து வந்தவர்கள் மூலம்தான் இந்நோய் பரவல் அதிகமாகியுள்ளது.  

தமிழகத்தை பொறுத்தவரைக்கும் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருநெல்வேலி இன்னும் பல மாவட்டங்களில் இருந்து பலர் தொழில் செய்வதற்காகவும், தொழிலாளர்களாகவும் சென்னைக்கு வந்து பணிபுரிந்து வந்தனர். அவர்கள், இந்த ஊரடங்கு காரணமாக சொந்த மாவட்டங்களுக்கு சென்றதால் அங்கே பெரும்பாலானவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சென்னையை பொறுத்தவரைக்கும் நோய் பரவ காரணம் அதிகமான மக்கள் வசிக்கிறார்கள். சென்னை மாநகராட்சியில் மட்டும் 26 லட்சம் பேர் குடிசை பகுதிகளில் வசிக்கிறார்கள். நெருக்கமான, குறுகலான தெருக்களில் வசிக்கிறார்கள். சென்னையில் கோயம்பேடு மார்க்கெட் இயங்கி வந்தது. ஆசியாவிலேயே மிகப்பெரிய மார்க்கெட். 3,041 கடைகள் உள்ளது. சுமார் 20 ஆயிரம் பேர் பணிபுரிந்து வருகிறார்கள். இங்கு தொற்று ஏற்படும் என்று உயர் அதிகாரிகள் கூறியதால், கடந்த மார்ச் 19ம் தேதியே சிஎம்டிஏ அதிகாரிகள் கோயம்பேடு வியாபாரிகள் சங்கத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த மார்ச் 29ம் தேதி கோயம்பேடு மார்க்கெட்டுக்கு நேரடியாக சென்று பார்வையிட்டார். அப்போதும், சங்க நிர்வாகிகளிடம் தொற்று ஆபத்து குறித்து கூறினார்.

ஆனால் வியாபாரிகள் பொருட்படுத்தவில்லை. ஏப்ரல் 6ம் தேதி துணை முதல்வர் தலைமை செயலகத்தில் வியாபாரிகள் சங்க நிர்வாகிகளிடம் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினார். தற்காலிக மார்க்கெட் சென்றால் அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும். கோயம்பேட்டில் தொடர்ந்து மார்க்கெட் செயல்பட்டால் தொற்று ஏற்படும் என்று எச்சரித்தார்.  ஆனால் சங்க நிர்வாகிகள் தொடர்ந்து மறுத்து விட்டனர். மீண்டும், ஏப்ரல் 11ம் தேதி கோயம்பேடு சங்க நிர்வாகிகளிடம் துணை முதல்வர் பேசினார். தமிழகம் முழுவதும் மார்க்கெட் மாற்றி அமைத்துள்ளோம். கோயம்பேடு வருபவர்கள் மாஸ்க் அணிவதில்லை, சமூக இடைவெளியை பின்பற்றுவதில்லை என்றார். ஆனால் வியாபாரிகள் ஏற்கவில்லை. தொழில் பாதிக்கும் என்பதையே தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். தொற்று பாதித்தால் மார்க்கெட்டை மூட வேண்டியது வரும் என்றும் எச்சரிக்கப்பட்டது. 24ம் தேதியும் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது.

மாநகராட்சி ஆணையரும் பேசினார். காவல் துறை ஆணையரும், வேளாண் துறை செயலாளரும் பேசினார். பலமுறை கோயம்பேடு சங்க நிர்வாகிகளிடம் அரசு பேச்சுவார்த்தை நடத்தினார். இன்றைக்கு கோயம்பேட்டில் இருந்துதான் அதிகமான பேர் வெளிமாவட்டத்துக்கு சென்றதால் அந்த மாவட்டத்திலும் நோய் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்துள்ளது. சென்னையிலும் நோய் அதிகரிக்க கோயம்பேடு மார்க்கெட் தான் காரணம். அரசை பொறுத்தவரைக்கும் கொரோனா வைரசை தடுக்க கடுமையான முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் கோயம்பேட்டில் இருக்கும் வியாபாரிகள் தங்கள் விற்பனை பாதிக்கப்படும், நஷ்டம் ஏற்படும் என்ற காரணத்தினால் அவர்கள் வேறு இடத்துக்கு செல்ல மறுத்தார்கள்.

இருந்தாலும் அரசு நோய் பரவல் ஏற்பட்ட உடனேயே கோயம்பேடு மார்க்கெட் மூடப்பட்டது. வியாபாரிகள் சங்க நிர்வாகிகளையும் அழைத்து இனி இங்கு விற்பனை செய்ய அரசு அனுமதிக்காது என்று சொல்லப்பட்டது. இதையடுத்து திருமழிசைக்கு மார்க்கெட் மாற்றப்பட்டு, கடந்த 10ம் தேதி முதல் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. கோயம்பேடு மார்க்கெட் விஷயத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை, அதனால் கோயம்பேடு பகுதியால் நோய் பரவல் அதிகமாகி விட்டது என்று உண்மைக்கு புறம்பாக கூறப்படுகிறது. அரசு பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டது. அரசு ஏற்படுத்தி தருவதாக கூறிய தற்காலிக மார்க்கெட்டுக்கு செல்ல வியாபாரிகள் மறுத்ததனர். இதுதான் உண்மை நிலை என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்துகின்றேன். இவ்வாறு அவர் பேசினார்.

பத்தாம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுத போக்குவரத்து வசதி
ஜூன் 1ம் தேதி முதல் 10ம் வகுப்பு தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேவையான போக்குவரத்து வசதியை கல்வி துறை அதிகாரிகளுடன் கலந்து பேசி மாவட்ட கலெக்டர்கள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். தமிழகத்தில் தொழிற்சாலை அதிகமாக உள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளை தவிர்த்து, 50 சதவீத தொழிலாளர்களுடன் தொழிற்சாலைகளை தொடங்க அனுமதி அளிக்கலாம்  என்று முதல்வர் கூறினார்.



Tags : traders ,Coimbatore ,Chief Minister ,Edappadi ,CMBT ,Tamil Nadu ,CM Edappadi ,state , Tamil Nadu, Corona, Coimbatore merchant and CM Edappadi
× RELATED பதற்றமான வாக்குச்சாவடிகளில் மாவட்ட கலெக்டர் ஆய்வு