×

சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு பிணையில்லாமல் 3 லட்சம் கோடி ரூபாய் கடன்: 45 லட்சம் நிறுவனங்கள் பயன்பெறும்

* மத்திய நிதியமைச்சர் அறிவிப்பு

புதுடெல்லி: சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு பிணையில்லாமல் 3 லட்சம் கோடி கடன் வழங்குவது உட்பட, பல்வேறு பொருளாதார ஊக்குவிப்பு சலுகை திட்டங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த சலுகையால் 45 லட்சம் நிறுவனங்கள் பலன் அடையும் என, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். கொரோனா ஊரடங்கால் தொழில்துறைகள், நிறுவனங்கள் முடங்கியுள்ளன. இதனால், நாட்டின் பொருளாதாaரம் அதல பாதாளத்துக்கு வீழ்ந்து கொண்டிருக்கிறது. தொழில்துறைகளால் இனி மீண்டு வர முடியுமா என்ற நிலை உருவாகியுள்ளது. எனவே, மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்என்று கோரிக்கைகள் விடுக்கப்பட்டன.

மத்திய அரசு ஏற்கனவே சுகாதார பணியாளர்கள் ஒவ்வொருவருக்கும் 50 லட்சம் காப்பீடு, 20 கோடி பெண்களின் ஜன்தன் கணக்கில் 3  மாதங்களுக்கு தலா 500, ஏழைகளுக்கு இலவச காஸ், வேலை உறுதி திட்டத்தில் கூலி 202 ஆக உயர்வு உள்ளிட்ட திட்டங்களை அறிவித்தது. இதுபோல், 100 தொழிலாளர்களுக்கு கீழ் உள்ள நிறுவனங்களில் 15,000க்கு கீழ் சம்பளம் வாங்குவோரின் நிறுவனம் மற்றும் ஊழியர்களின் பிஎப் பங்களிப்பை 3 மாதங்களுக்கு செலுத்துவது உள்ளிட்ட சலுகைகள் வெளியாகின. இதுபோல், ரிசர்வ் வங்கியும் இஎம்ஐ சலுகை மற்றும் வங்கிகள் கடன் வழங்குவதை அதிகரிக்க ஏதுவாக அறிவிப்புகளை வெளியிட்டது. எனினும், ஊரடங்கால் மொத்தமாக முடங்கிப்போன குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு சலுகைகள் அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில், கொரோனா தொற்றால் சீர்குலைந்துள்ள பொருளாதாத்தை மேம்படுத்த 20 லட்சம் கோடிக்கான சலுகைகள் அறிவிக்கப்படும் என, பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் தெரிவித்தார். இதன்படி, முதற்கட்ட தற்சார்பு இந்தியா என்ற பொருளாதார நிதியுதவி தொகுப்பு குறித்த விவரங்களை, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று வெளியிட்டார்.இதில் அறிவிக்கப்பட்ட சலுகைகள் வருமாறு:
* சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்  நிறுவனங்களுக்கு பிணையில்லாமல் 3 லட்சம் கோடி கடனுதவி வழங்கப்படும்.  இந்த கடன்களை திருப்பி செலுத்த 4 ஆண்டுகள் அவகாசம் வழங்கப்படுகிறது. அசலை 12 மாதத்துக்கு பிறகு செலுத்த தொடங்கலாம். வட்டி மாறாமல் இருக்கும். வரும் அக்டோபர் 31ம் தேதி வரை இந்த திட்டம் அமலில் இருக்கும். இதனால் 45 லட்சம் சிறு குறு தொழில் நிறுவனங்கள் பலன் பெறும். 100 கோடி  விற்று முதல் உள்ள நிறுவனங்கள், 25 கோடி வரை கடன் பாக்கி உள்ள நிறுவனங்கள் இந்த சலுகையை பெற்றுக் கொள்ளலாம். கடந்த 29.2,2020 அன்று நிலுவையில் உள்ள கடனில் 20 சதவீதம் கடனாக பெற்றுக் கொள்ளலாம்.
*  இது தவிர, நலிவடைந்த மற்றும் வராக்கடன் பட்டியலில் இருக்கும் சிறு, குறு மற்றும் நடுத்தர  தொழில் நிறுவனங்களுக்கு ரூ.20 ஆயிரம் கோடி கடன் வழங்கப்படும். இதன்  மூலம் 2 லட்சம் நிறுவனங்கள் பயனடையும்.
* மேலும் சிறு, குறு மற்றும் நடுத்தர  நிறுவனங்களுக்கு ₹50 ஆயிரம் கோடி நிதி முதலீட்டுக்கு வழி வகை செய்யப்படும்.
* சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு மத்திய  அரசு வகுத்திருந்த வரையறை மாற்றப்பட்டுள்ளது. அதாவது முதலீடு 1 கோடி வரை மற்றும் ஆண்டு வர்த்தகம் 5 கோடிக்கு கீழ் உள்ள நிறுவனங்கள் குறு  நிறுவனங்களாகவும், முதலீடு 10 கோடி மற்றும் ஆண்டு வர்த்தகம் 50 கோடிக்கு கீழ் உள்ளவை சிறு நிறுவனங்களாகவும், முதலீடு ₹20 கோடி மற்றும் ஆண்டு வர்த்தகம் 100 கோடிக்கு கீழ் உள்ளவை நடுத்தர நிறுவனங்களாகவும் வரையறை செய்யப்பட்டுள்ளன.
* சிறு, குறு மற்றும் நடுத்தர  நிறுவனங்களுக்கு உதவும் வகையில், இனி ₹200 கோடி வரையிலான டெண்டர்களில்  வெளிநாட்டு நிறுவனங்கள் பங்கேற்க அனுமதி கிடையாது.
* வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள், வீட்டுக் கடன் வழங்கும் நிதி நிறுவனங்கள்,  மற்றும் குறுங்கடன் நிறுவனங்கள் ஆகியவற்றில் பணப்புழக்கத்தை அதிகரிக்க ₹30 ஆயிரம் கோடி மதிப்பில் திட்டம் வகுக்கப்படும்.
* வங்கி அல்லாத  நிதி நிறுவனங்கள் வழங்கும் கடனுக்கு பகுதி அளவு உத்தரவாதத்தை அரசு  அளிக்கும். இதற்காக ரூ.45 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
* மின் விநியோக நிறுவனங்களுக்கு குறுகிய கால கடனாக ₹90 ஆயிரம் கோடி வழங்கப்படும்.
* ரயில்வே, நெடுஞ்சாலை துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்டவற்றின்  ஒப்பந்ததாரர்கள் தங்கள் ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள பணிகளை முடிப்பதற்கு 6  மாத காலம் கூடுதல் அவகாசம் வழங்கப்படும்.
* பதிவு செய்த ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் கட்டுமானத்தை முடிக்க 6 மாத காலம் கூடுதல் அவகாசம் வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஏழைகளுக்கு ஒன்றும் இல்லை
‘மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் அறிவிப்புகளால் ஏழை மக்களுக்கு எந்த பலனும் இல்லை,’ என முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக வீடியோ கான்பரன்சிங் மூலமாக செய்தியாளர்களுக்கு சிதம்பரம் நேற்று அளித்த பேட்டி: மத்திய அரசின் கோவிட்- 19 பொருளாதார சலுகை திட்டமானது, லட்சக்கணக்கான ஏழை மற்றும் பசியோடு நடந்தே சொந்த ஊர் செல்லும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் இல்லை. நிதியமைச்சரின் அறிவிப்புக்கள் ஏமாற்றத்தை தருவதாகவே உள்ளது.

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு பிணையின்றி ரூ.3 லட்சம் கோடி கடனுதவி வழங்கப்படும் என்று அவர்  அறிவித்துள்ளார். அதுபோக, மீதமுள்ள ரூ.16.4 லட்சம் கோடி எங்கே? சிறு, குறு தொழில்களுக்கான கடனுதவியை தவிர நிதியமைச்சரின் அறிவிப்பு ஏமாற்றத்தையே  தருகின்றது. இந்த அரசானது சொந்த அறியாமை மற்றும் பயத்தின் கைதியாக உள்ளது.  இவ்வாறு அவர் கூறினார்.

பிரதமர் பாராட்டு
பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட டிவிட்டர் பதிவில், `புதிய பொருளாதார சலுகைகள் தொழில் முனைவோர்களுக்கு அதிகாரம் வழங்கவும், பணப் புழக்கத்தை அதிகரிக்கவும், போட்டி திறனை வலுப்படுத்தவும் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக குறு,சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு பெரிதும் உதவும்,’ என்று கூறியுள்ளார்.
 
‘மிகப்பெரிய ஜீரோ’
மேற்கு வங்க முதல்வர் ம‍ம்தா பானர்ஜி கூறுகையில், மத்திய அரசு அறிவித்துள்ள சிறப்பு பொருளாதார சலுகை அறிவிப்பில் மிகப்பெரிய ஜீரோவை தவிர வேறொன்றும் இல்லை. இது மக்களை எளிதில் முட்டாள்களாக்கும் கண்துடைப்பு. பிரதமர் அறிவித்த ரூ.20 லட்சம் கோடி சலுகை மாநில அரசுகளுக்கு உதவும் என்று ஆவலுடன் எதிர்பார்த்திருந்தோம். ஆனால், மத்திய நிதியமைச்சர் கூறுவதைப் பார்த்தால், நேற்று அறிவிக்கப்பட்ட அனைத்தும் உளறல் என்று தெரிகிறது,’’ என்றார்.

பிஎப் சந்தாவில் சலுகை
மூன்று மாத பிஎப் பங்களிப்பு செலுத்தும் சலுகை வரையறைக்குள் வராத மற்ற ஊழியர்களுக்கும் இந்த முறை சலுகை வழங்கப்பட்டுள்ளது. அதாவது, அடுத்த 3 மாதத்திற்கு தொழிலாளர்கள் மற்றும் நிறுவனங்கள் செலுத்த வேண்டிய வைப்பு தொகையின் விகிதம் 12 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், அடுத்த 3 மாதத்திற்கு ஊழியர்களின் சம்பளத்தில் கூடுதல் தொகை கிடைக்கப் பெறும். இந்த சலுகைக்காக 6,750 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 6.5 லட்சம் தொழில் நிறுவனங்களை சேர்ந்த 4.3 கோடி ஊழியர்கள் இதன் மூலம் பயனடைவார்கள். இந்த பிஎப் பங்களிப்பு விகித குறைப்பு, பொதுத்துறை நிறுவனங்களுக்கு பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.

3 மாத பி.எப் தொகையை மத்திய அரசே செலுத்தும்
 தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் தொழிலாளர்கள் செலுத்த வேண்டிய மாத சந்தாவான 12 சதவீதமும், தொழில் நிறுவன உரிமையாளர்கள் செலுத்த வேண்டிய அதே அளவு தொகையையும் அடுத்த 3 மாதங்களுக்கு மத்திய அரசே செலுத்தும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். முதல்கட்ட நிதி சலுகை வழங்கப்பட்ட போது, மார்ச், ஏப்ரல், மே மாதங்களுக்கான பிஎப் பங்களிப்பை மத்திய அரசே செலுத்தும் என அறிவிக்கப்பட்டது. இது தற்போது ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், 3.67 லட்சம் தொழில் நிறுவனங்களைச் சேர்ந்த 72.22 லட்சம் தொழிலாளர்கள் பயனடைவார்கள் என்றும், இதற்காக ரூ.2,500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

மின் விநியோக நிறுவனங்களுக்கு 90,000 கோடி
நாடு முழுவதும் ஊரடங்கால் மின் விநியோக நிறுவனங்களில் கட்டண வசூல் அளவு, எப்போதும் இல்லாத வகையில் 80 சதவீத அளவுக்கு குறைந்துள்ளது. தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள் கடந்த 50 நாட்களாக மூடப்பட்டுள்ளதாலும், மத்திய, மாநில அரசுகள் மின்சார கட்டணத்தை செலுத்த கால அவகாசம் வழங்கியுள்ளன. இதனால், மின் உற்பத்தி நிறுவனங்கள் கடும் நிதி பற்றாக்குறையில் சிக்கியுள்ளன. இதே நிலை தொடர்ந்தால், மின் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்படும். இதை கருத்தில் கொண்டு, மின் விநியோக நிறுவனங்களுக்கு குறுகிய கால கடனாக ரூ.90,000 கோடி வழங்கப்படும்.

ஆனால், மாநில அரசின் உத்தரவாத அடிப்படையில்தான் இது வழங்கப்படும். நுகர்வோர் செலுத்தும் மின் கட்டணத்தில் இருந்து கடன் தொகையை நேரடியாக செலுத்த வேண்டி வரும். தற்போது மின் விநியோக நிறுவனங்கள், மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய நிலுவை 94,000 கோடி உள்ளது குறிப்பிடத்தக்கது.

டிடிஎஸ், டிசிஎஸ் பிடித்தம் 25 சதவீதம் குறைக்கப்படும்
நிர்மலா சீதாராமன் தனது அறிவிப்பில் மேலும் கூறுகையில், ‘‘டிடிஎஸ் மற்றும் டிசிஎஸ் வரி பிடித்தங்கள் தற்போது உள்ள அளவில் இருந்து 25 சதவீதம் குறைக்கப்படும். இது இந்த நிதியாண்டின் மீதமுள்ள பகுதி முழுவதும், அதாவது 31 மார்ச் 2021 வரை அமலில் இருக்கும். இதன் மூலம், ரூ.50 ஆயிரம்  கோடி அளவுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும்,’’ என்றார்.

டிடிஎஸ் (வரி பிடித்தம்) மற்றும் டிசிஎஸ்
(வரி வசூல்) புதிய விதிமுறைகள்
                தற்போதைய வரி    புதிய வரி
வாடகை                5%        3.75%
தரகு                5%        3.75%
வட்டி                10%        7.50%
டிவிடெண்ட்    1            0%        7.50%
இபிஎப்-ல் முதிர்வுக்கு முன்பே எடுத்தல்    10%        7.50%
தொழில்சார் கட்டணம்            10%        7.50%
லாட்டரி, குதிரை பந்தயம்        30%        22.50%

குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான வரையறை
முன்பு இருந்த வரையறை    குறு நிறுவனம்    சிறு நிறுவனம்    நடுத்தர நிறுவனம்
உற்பத்தி நிறுவனங்கள்    முதலீடு 25 லட்சம் வரை    முதலீடு 5 கோடி வரை    முதலீடு 10 கோடி வரை
சேவை நிறுவனங்கள்    முதலீடு 10 லட்சம் வரை    முதலீடு 2 கோடி வரை    முதலீடு 5 கோடி வரை
புதிய வரையறை உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் சேவை நிறுவனங்கள்    முதலீடு 1 கோடி வரை மற்றும் ஆண்டு வர்த்தகம் 5 கோடி வரை    முதலீடு 10 கோடி வரை மற்றும் ஆண்டு வர்த்தகம் 50 கோடி வரை    முதலீடு 20 கோடி வரை மற்றும் ஆண்டு வர்த்தகம் 100 கோடி வரை

Tags : businesses ,enterprises , Small, Small and Medium Enterprises, Federal Finance Minister, Corona, Curfew
× RELATED ஒன்றிய அரசின் தவறான பொருளாதார கொள்கை,...