×

நோயாளியை காப்பாற்ற அமானுஷ்ய பூஜை; வெளியே வந்தால் காவுதான்... திருப்பத்தூர் மலையடிவாரத்தில் அரங்கேறிய திகில் காட்சிகள்

திருப்பத்தூர்: இன்றைய நவீன உலகில் பில்லி, சூனியம், ஏவல், மாந்திரீகம் போன்றவற்றை பலர் நம்ப மறுத்தாலும், இதை நம்பவைத்து மக்களிடம் பணம் பறிக்கும் கும்பல் இருந்துகொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில் உயிர்போகும் நிலையில் உள்ள ஒருவரை மாந்திரீகம் மூலம் காப்பாற்றி, அதேவேளையில் வேறு ஒரு அப்பாவியின் உயிரை பறிக்கும் ‘கொலு’ எனப்படும் பூஜை திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சில கிராமங்களில் இன்றும் நடந்து வருவதாக கூறப்படுகிறது. அதுபற்றிய விவரம்: திருப்பத்தூர் மாவட்டத்தில் சுற்றுலாதலங்களான ஏலகிரி, ஜவ்வாது மலைகள் உள்ளன. இங்குள்ள மலைவாசிகளின் பிரதான தொழில் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு.

மலையடிவாரத்தில் மேற்கத்தியனூர், பொம்மிகுப்பம், கொடுமாம்பள்ளி என 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இவற்றில்  ஆயிரக்கணக்கான மக்கள் வசிக்கின்றனர். இந்த மலை கிராமங்களில் கூடுவிட்டு கூடு பாய்ந்து உயிர் பிடிக்கும் ‘கொலு’ எனப்படும் அமானுஷ்ய பூஜை காலம் காலமாக அடிக்கடி நடப்பதாக கூறப்படுகிறது. உடல்நலம் பாதித்து மருத்துவர்களால் கைவிடப்பட்ட நோயாளியை, இந்த கொலு பூஜை மூலம் உடல் நலம் பெற வைப்பதாக நம்பப்படுகிறது. இந்த பூஜை நள்ளிரவு முதல் விடியவிடிய சிறப்பு பொருட்களுடன் நடத்தப்படுகிறது. மாந்திரீகர் கொண்டுவரும் ஒரு பொம்மைக்குள் நோயாளியின் உயிர் இறக்கப்படுமாம்.

அதன்பின்னர் வெளியே நடமாடுபவர்களில் யாரேனும் ஒருவரது உயிரை அமானுஷ்ய சக்தி மூலம் பிடிக்க வரச்செய்து படுத்த படுக்கையாக இருக்கும் நோயாளியின் உடலில் செலுத்துவார்களாம். அதன்பின்னர் பொம்மைக்குள் இருக்கும் அந்த நோயாளியின் உயிரை வெளியே நடமாடியவருக்கு திருப்பி அனுப்பி விடுவார்களாம். இதன்மூலம் நோயாளி உயிர் பிழைத்துவிடுவார், ஆனால் வெளியே நடமாடிய அந்த அப்பாவி, திடீரென எக்காரணமும் இல்லாமல் சில மணி நேரங்களில் தானாக இறந்துவிடுவாராம். இதைத்தான் ‘கொலு’ பூஜை என மலையடிவார மக்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில் நேற்று இரவு திருப்பத்தூர் அடுத்த அருகே உள்ள மேற்கத்தியனூர் கிராமத்தில் இந்த”கொலு” பூஜை நடத்தப்போவதாக அப்பகுதி மக்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனால் பீதியடைந்த மக்கள், அமானுஷ்ய பூஜையில் தங்கள் குடும்பம் பலியாகிவிடக்கூடாது என அஞ்சி வீடு முழுவதும் மஞ்சள் நீர் தெளித்து, வேப்பிலை தோரணை கட்டி, வீட்டு வெளியே சாம்பலை தூவி கோடுகள் வரைந்து தூங்காமல் விழித்திருந்தனர். இதுபோன்று செய்தால் கொலு பூஜை தங்களையோ அல்லது தங்கள் குடும்பத்தையோ காவு வாங்காது என நம்புகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘மலையடிவார கிராமங்களில் கொலு பூஜை அடிக்கடி நடக்கிறது.

கிராமத்தில் எங்காவது பூஜை செய்கிறார்கள் என தெரிந்தால், அன்று இரவு முழுவதும் எங்களால் தூங்கவே முடியாது. ஏனெனில் பல நேரங்களில் தூக்கத்திலேயே எங்களது உயிர் போய்விட வாய்ப்புள்ளது. எனவே வெளியே நடமாட மாட்டோம், வீடுகளில் தூங்கவும் மாட்டோம். வீடு மற்றும் வெளிப்பகுதிகளில் மஞ்சள், வேப்பிலை கரைசலை தெளித்தும், சாம்பலை தூவியும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விடியவிடிய பீதியுடன் இருப்போம். எனவே இதுபோன்ற அமானுஷ்ய பூஜை செய்யும் மாந்திரீகர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என தெரிவித்தனர்.


Tags : patient ,Gautam , Patient, paranormal pooja, kau, Tirupattur
× RELATED புதுச்சேரி ஜிப்மரில் நாளை...