×

சென்னையில் இருந்து வந்தவர்கள் ஒரே லாட்ஜில் தங்க வைப்பு; குமரியில் கொரோனா வேகமாக பரவும் அபாயம்: போராட்டம் நடத்த முயன்றதால் பரபரப்பு

ஆரல்வாய்மொழி: சென்னையில் இருந்து வருகிறவர்களை கன்னியாகுமரியில் ஒரே லாட்ஜில் தங்க வைப்பதால் பாதிப்பு இல்லாதவர்களுக்கும் கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க போடப்பட்ட ஊரடங்கு தமிழகத்தில் தளர்த்தப்பட்டுள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட வெளிமாவட்டங்களில் இருக்கும் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தற்போது கார், பைக் உள்ளிட்ட வாகனங்கள் மூலம் சொந்த ஊர் வந்துகொண்டிருக்கின்றனர். இதற்காக அவர்கள் அரசு உத்தரவுபடி இபாஸ் பெற்று வருகின்றனர். இவ்வாறு குமரி மாவட்டத்திற்கு வருகிறவர்களுக்கு இ பாஸ் வழங்கினாலும், அவர்களுக்கு எந்த மருத்துவ பரிசோதனையும் செய்யப்படுவதில்லை.

இதனால் குமரி மாவட்ட எல்லையான ஆரல்வாய்மொழி சோதனைசாவடியில் சுகாதாரத்துறை சார்பில் மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது. இதற்காக அண்ணா கல்லூரியில் சிறப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை உள்பட சிவப்பு மண்டல பகுதிகளில் இருந்து வருகிறவர்களுக்கு சளி மாதிரி எடுத்து பரிசோதனை செய்யப்படும். இதில் கொரோனா இல்லை என தெரியவந்தால் அவர்கள் வீடுகளுக்கும், கொரோனா தொற்று இருப்பது ெதரியவந்தால் அவர்கள் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி தனி வார்டுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றனர். இவ்வாறு கடந்த 2ம் தேதி முதல் இன்று காலை வரை குழந்தைகள், முதியவர்கள், நோயாளிகள் என சுமார் 2500 பேர் சிவப்பு மண்டல பகுதிகளில் இருந்து வந்துள்ளனர்.

இவர்களுக்கு ஆரல்வாய்மொழி சிறப்பு முகாமில் சளி மாதிரி எடுக்கப்பட்டுள்ளது. பரிசோதனை அறிக்கை வர 2 நாட்கள் வரை ஆவதால் அவர்கள் கன்னியாகுமரியில் உள்ள லாட்ஜில் தங்க வைக்கப்படுகின்றனர். லாட்ஜில் தங்க வைக்கப்படும் நபர்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் கிடைப்பதில்லை. இதனால் பொருட்கள் வாங்கவும், டீ குடிக்கும் அவர்கள் வெளியே வருகின்றனர். இதில் யாருக்காவது கொரோனா இருப்பது தெரியவந்தால் ஒன்றிரண்டு நாட்களுக்கு பின்னர் அவர்கள் மட்டும் ஆசாரிபள்ளத்துக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். ஆனால் அதுவரை அவர் நோய் பாதிப்பு இல்லாதவர்களுடன் தான் இருக்கிறார். இதனால் அவர் மூலம் மற்றவர்களுக்கும் கொரோனா பரவும் அபாயம் உள்ளது.

இது சிவப்பு மண்டல பகுதியில் இருந்து வரும் பொதுமக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. சென்னை மற்றும் சிவப்பு மண்டல பகுதியில் இருந்து தினமும் 300க்கும்  மேற்பட்டவர்கள் வருகின்றனர்.  எனவே புதியதாக வருகிறவர்களை தனித்தனியாக தங்க வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பொதுவான இடத்தில் தங்க வைப்பதால் அவர்களுக்கு பாதுகாப்பற்ற நிலையும், அடிப்படை வசதிகள் இல்லாத நிலையம் உள்ளது. இந்தநிலையில் இன்று காலை சுமார் 45 பேர் வந்தனர். அவர்களுக்கு கன்னியாகுமரியில் அறைகள் இல்லாததால் அண்ணா கல்லூரியிலேயே காத்திருக்க வைக்கப்பட்டனர். இதில் பெண்கள், குழந்தைகள் இருந்ததால் அவர்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகினர்.

இதனால் தங்களை வீடுகளுக்கு அனுப்ப வேண்டும் என  அவர்கள் போராட்டம் நடத்த முயற்சித்தனர். இதையடுத்து அவர்கள் அனைவரும்  இறச்சகுளத்தில் உள்ள கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது இன்று காலை அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆரல்வாய்மொழி சிறப்பு முகாமில் சளி மாதிரி எடுக்கப்பட்ட பின்னர் அனைவரையும் அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும். பரிசோதனையில் பாசிட்டிவ் என தெரியவந்தால் அவர்களை மட்டும் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும். இதன்மூலம் நோய் தொற்றில் இருந்து மற்றவர்களை பாதுகாக்க முடியும் என அவர்கள் கூறினர்.

Tags : lodge ,Chennai ,Kumari , Chennai, Lodge Gold Deposit, Kumari, Corona, Risk
× RELATED சித்திரை மாத பிறப்பையொட்டி குமரி...