×

அருப்புக்கோட்டையில் ரூ.60 கோடி ஜவுளி தேக்கம்: ஊரடங்கால் விற்பனை பாதிப்பு

அருப்புக்கோட்டை: நாடு தழுவிய ஊரடங்கால் அருப்புக்கோட்டையில் ரூ.60 கோடி மதிப்பிலான ஜவுளிகள் விற்பனையாகாமல் தேக்கமடைந்துள்ளன. விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை மற்றும் சுற்றுப்பகுதிகளில் நெசவாளர்கள் அதிக எண்ணிக்கையில் வசிக்கின்றனர். இப்பகுதிகளில் சுமார் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் உள்ளன. நெசவுத்தொழில் சார்ந்த டப்பா, நூல் சுற்றுதல், பசை ஏற்றுதல், சாயமிடுதல், சேலை பிரின்ட்டிங் செய்தல், என நேரடியாகவும், மறைமுகமாகவும் 25 ஆயிரம் பேர் இந்த தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.  ஜவுளி உற்பத்தியாளர்கள் 150 பேர் உள்ளனர்.  இங்கு பாலி காட்டன், காட்டன், நார் பட்டுச்சேலை ஆகியவை உற்பத்தி செய்யப்படுகின்றன.

இங்கு நெய்யப்படும் சேலை ரகங்கள் ஆந்திரா, ஒரிசா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. மேலும் சிறு விசைத்தறி துணி உற்பத்தியாளர்கள் ஈரோடு சந்தையில் தங்களது சேலைகளை விற்பனை செய்து வந்தனர். அங்கு வரும் ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த மொத்த வியாபாரிகள் இந்த சேலைகளை வாங்கி செல்வர். தற்போது கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக ஈரோடு சந்தை மூடப்பட்டுள்ளது, இதனால் அருப்புக்கோட்டை வியாபாரிகள் ஈரோடு சந்தைக்கு செல்ல முடியவில்லை. வட மாநிலங்களுக்கும் சேலைகளை விற்பனைக்கு அனுப்ப முடியவில்லை.

தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, நெல்லை போன்ற நகரங்களில் பெரிய ஜவுளிக் கடைகளை திறக்க அனுமதியில்லாததால், உற்பத்தி செய்த ஜவுளிகளை அனுப்ப முடியவில்லை. இதனால் அருப்புக்கோட்டை பகுதிளில் மட்டும் ரூ.60 கோடி மதிப்பிலான ஜவுளிகள் விற்பனையாகாமல் தேங்கி கிடக்கின்றன. இது குறித்து ஜவுளி உற்பத்தியாளர்கள் சிலர் கூறுகையில், ‘‘உற்பத்தி செய்த சேலைகளை விற்பனை செய்ய முடியாமல், பொருளாதார நெருக்கடியில் திணறி வருகிறோம். இதனால் விசைத்தறிகளை இயக்க முடியவில்லை.

எனவே முத்ரா திட்டத்தின் கீழ் அனைத்து வங்கிகளிலும், ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு கடன் வழங்க வேண்டும். தேங்கி கிடக்கும் ஜவுளி ரகங்களை விற்பனை செய்ய மதுரை மாட்டுத்தாவணியில் தற்காலிக ஜவுளி விற்பனை சந்தையை ஏற்படுத்த வேண்டும்’’ என்றனர்.



Tags : Aruppukkottai , Aruppukkottai, Textile stall
× RELATED அருப்புக்கோட்டை காந்திநகர் பஸ்...