×

வாணியம்பாடி நகராட்சி ஆணையருக்கு நோட்டீஸ்: 2 வாரத்திற்குள் நகராட்சி நிர்வாக அனைவரும் பதிலளிக்க மனித உரிமை ஆணையம் உத்தரவு

திருப்பத்தூர்: பழக்கடைகளை சேதப்படுத்திவிட்டு வருத்தம் தெரிவித்த வாணியம்பாடி நகராட்சி ஆணையருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முழுஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில் ஊரடங்கு காலத்தை மேலும் நீட்டிக்கப் போவதாக பிரதமர் அறிவித்துள்ளார். இதனிடையே நேற்று வாணியம்பாடி காய்கறி சந்தையில் ஆய்வு செய்ய நகராட்சி ஆணையர் சிசில் தாமஸ் மற்றும் சில அதிகாரிகள் சென்றிருந்தனர். அப்போது, நடைபாதையில் காய்கறி பழங்களை விற்கும் நடைபாதை வியாபாரிகள் ஊரடங்கு விதிமீறல் நடந்திருப்பதாகக் கூறி காய்கறி பழங்களை தரையில் தள்ளி ரோட்டில் வீசியுள்ளார்.

இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நகராட்சி ஆணையர் சிசில் தாமசின் இந்த செயலுக்கு தி.மு.க மகளிர் அணிச் செயலாளர் கனிமொழி எம்.பி கண்டனம் தெரிவித்து, ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில் வாணியம்பாடி ஆணையரின் இந்த மனிதத்தன்மையற்ற செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஏழை வியாபாரிகள் என்றால் அவ்வளவு இளக்காரமா ? எளியவர்களிடம் மட்டுமே இவர் போன்றவர்களின் அதிகாரக் கரங்கள் அத்துமீறும். எச்சரிக்கை செய்வதை விடுத்து, இப்படி உணவுப் பொருட்களை கொட்டிக் கவிழ்க்க யார் அதிகாரம் தந்தது ? இவர்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். என பதிவிட்டிருக்கிறார்.

கண்டனங்கள் அதிகரித்த நிலையில், நகராட்சி ஆணையர் சிசில் தாமஸ், தான் செய்த தவறை உணர்ந்து, வியாபாரிகளிடம் வருத்தம் தெரிவித்ததோடு மட்டுமின்றி, கிழே தள்ளிவிட்ட பழங்களுக்கான இழப்பீட்டையும் வழங்கினார். மேலும் நகராட்சி விதிகளை முறையாக கடைபிடிக்கவும் வலியுறுத்தினார். இந்நிலையில் செய்தியின் அடிப்படையில் மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு தொடர்ந்துள்ளது. பழக்கடைகளை சேதப்படுத்திவிட்டு வருத்தம் தெரிவித்த வாணியம்பாடி நகராட்சி ஆணையருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 2 வாரத்திற்குள் நகராட்சி நிர்வாக அனைவரும் பதிலளிக்க மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


Tags : Municipal Commissioner ,Municipal Administration ,Vaniyambadi: Human Rights Commission ,administration , Vaaniyambadi Municipal Commissioner, Notice, Human Rights Commission
× RELATED காலை 5.30 மணி முதல் மாதிரி வாக்குப்பதிவு:...