×

அந்தமான் வங்கக்கடல் பகுதியில் மே 16-ம் தேதி புயல் உருவாகிறது; அதன் பெயர் ஆம்பன் : வானிலை ஆய்வு மையம் தகவல்!!

சென்னை: அந்தமானுக்குத் தெற்கே வங்கக்கடலில் மே 16-ம் தேதி புயல் உருவாகக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது வரும் 15ம் தேதி மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தெற்கு வங்கக்கடல் பகுதியில் மையம் கொள்ளும். அதனை தொடர்ந்து 16ம் தேதி புயலாக வலுபெறக்கூடும். அவ்வாறு காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறினால் அதன் பெயர் ஆம்பன்.

இதன் காரணமாக தெற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள வங்கக்கடல் பகுதிகளில் வரும் 15ம் தேதி சூறாவளி காற்று மணிக்கு 45-55 வேகத்தில் அவ்வப்போது 65 கிலோ மீட்டர் வேகத்திலும், 16ம் தேதி சூறாவளி காற்று மணிக்கு 55-65 கிமீ வேகத்திலும் அவ்வப்போது 75 கிலோ மீட்டர் வேகத்திலும், 17ம் தேதி சூறாவளி காற்று மணிக்கு 65-75 கிமீ வேகத்தில் அவ்வப்போது 85 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இதன் காரணமாக மீனவர்கள் இப்பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்.

தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், தேனி, நாகை, கடலூர், விழுப்புரம், அரியலூர் ஆகிய  மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய,லேசான மற்றும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் நெல்லை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய,கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் ஒரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்ஷியஸ் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்ஷியஸை ஒட்டி இருக்கும், என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் 10 செமீ மழையும், காரைக்காலில் 5 செமீ மழையும், ராமேஸ்வரம், கும்பகோணம், சித்தார் ஆகிய இடங்களில் தலா 4 செமீ மழையும் பெய்துள்ளது.


Tags : storm ,Andaman Sea ,Andaman ,Bay of Bengal ,Meteorological Department , Andaman and Bengal Sea
× RELATED அந்தமான் கடலில் ருத்லேண்ட் தீவு அருகே...