×

கொரோனா ஊரடங்கால் விளைந்தும் விலையில்லை கொடியிலேயே வீணாகி வருவதால் கோடிக்கணக்கான வெற்றிலை நாசம்: தேவதானப்பட்டி விவசாயிகள் புலம்பல்

தேவதானப்பட்டி: கொரோனா ஊரடங்கால் வியாபாரிகள் வருகையின்றி தேவதானப்பட்டி பகுதியில் விளைந்த வெற்றிலைகள் விலையின்றி பறிக்கப்படாமல்,  கொடியிலேயே வீணாகும் அவலம் ஏற்பட்டுள்ளது. இதனால் கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் புலம்பி வருகின்றனர். தேனி மாவட்டம், தேவதானப்பட்டி பகுதியில் உள்ள காமாட்சியம்மன் கோவில் பகுதி, சில்வார்பட்டி, ஜெயமங்கலம், நாகம்பட்டி, நல்லகருப்பன்பட்டி, அழகர்நாயக்கன்பட்டி, மேல்மங்கலம், வடுகபட்டி, தேவதானப்பட்டி உள்ளிட்ட பல ஊர்களில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் வெற்றிலை சாகுபடி நடந்து வருகிறது. வெற்றிலையை கருப்பு, வெள்ளை என இருவகையாக பிரிப்பர். இதில் வெள்ளைக்கு அதிக விலையும், கருப்புக்கு குறைவான விலையும் கிடைக்கும். ஒரு ஏக்கர் வெற்றிலை கொடிக்கால் அமைக்க விவசாயிகள் ரூ.5 லட்சம் வரை செலவு செய்கின்றனர். இதற்காக நகைகளை அடகு வைத்தும், வட்டிக்கும், நிலத்தை வங்கிகளில் அடமானம் வைத்தும் பணம் வாங்குகின்றனர்.

வெற்றிலை நடவு செய்த 8வது மாதம் தொடங்கி இரண்டு ஆண்டுகளுக்கு மகசூல் கொடுக்கும். ஒரு கிலோ வெற்றிலை அதிகபட்சமாக ரூ.250 வரை விற்பனையாகும். பெரியகுளம், வத்தலக்குண்டு வியாபாரிகள், வெற்றிலை கொடிக்காலுக்கே வந்து விலை பேசி, வெற்றிலைகளை பறித்து தூத்துக்குடி, நெல்லை, மதுரை, திருச்சி, சென்னை, கோவை, திருப்பூர் ஆகிய நகரங்களுக்கும், ஆந்திரா, பெங்களூருக்கும் விற்பனைக்கு அனுப்பி வைப்பர். இதனிடையே, வெற்றிலையில் நோய் தாக்குதல் ஏற்பட்டால், விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்படும். தற்போது கொரோனா ஊரடங்கால், வியாபாரிகள் கொள்முதலுக்கு வரவில்லை. மேலும், வெற்றிலை கிலோ ரூ.30 வரை விலை குறைந்துள்ளது. இதனால், விவசாயிகள் வெற்றிலையை அறுவடை செய்யாமல் கொடியிலேயே விட்டுள்ளனர். தேவதானப்பட்டி பகுதியில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான வெற்றிலை வீணாகி வருகிறது. வெற்றிலையை அறுவடை செய்யாமலும், வங்கிகளில் வாங்கிய கடனை கட்ட முடியாமலும் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

Tags : millions ,Devadanapatti , Coronation,currencies result , costly waste, vine
× RELATED வாக்காளர் பட்டியலில் இருந்து...