×

மகாராஷ்டிராவில் சிக்கி தவித்த 252 பேர் கிருஷ்ணகிரி வந்தனர்: சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு

கிருஷ்ணகிரி: கொரோனா ஊரடங்கால் மகாராஷ்டிராவில் தவித்த வந்த 252 பேர் நேற்று கிருஷ்ணகிரிக்கு வந்தனர். அவர்களுக்கு உணவு வழங்கி வேலூர், சென்னை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அதிகாரிகள் அனுப்பி வைத்தனர். ஊரடங்கால் சொந்த ஊர் திரும்ப முடியாமல் பல்வேறு மாநிலங்களில் அவதிப்பட்டு வந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மத்திய அரசின் நடவடிக்கையால் சிறப்பு ரயில் மற்றும் பஸ் மூலம் அவரவர் ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். அதன்படி, மகாராஷ்ரா மாநிலம் சதாரா பகுதியில் தங்கி பணிபுரிந்து வந்த தமிழகம், கர்நாடக, கேரள மாநிலத்தைச் சேர்ந்த 252 பேர் தங்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க அம்மாநில அரசிடம் கோரிக்கை விடுத்தனர். இதையேற்று, மகாராஷ்டிரா அரசு, அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்து நேற்று 6 பஸ்கள் மூலம் 252 தொழிலாளர்களையும் தமிழகத்திற்கு அனுப்பி வைத்தது.

இதையடுத்து, நேற்று காலை கிருஷ்ணகிரிக்கு வந்த அவர்களை, தாசில்தார் தண்டபாணி வரவேற்று, கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லூரியில் தங்க வைத்தார். தொடர்ந்து, நகராட்சி மூலம் அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் வழங்கப்பட்டது. பின்னர், அவர்களை வேலூர், சென்னை, கோவை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அரசு பஸ்கள் மூலம் அதிகாரிகள் அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தாசில்தார் கூறுகையில், வெளி மாநிலங்களில் இருந்து கிருஷ்ணகிரிக்கு வந்த 400க்கும் மேற்பட்டவர்களை, அவர்களது சொந்த ஊர்களுக்கு அரசு பஸ்கள் மூலம் அனுப்பி வைத்துள்ளோம். மேலும், கர்நாடகா, கேரளாவைச் சேர்ந்தவர்களை அம்மாநில அரசிடம் பேசி அனுப்பி வைத்துள்ளோம் என்றார்.

Tags : Krishnagiri ,Maharashtra Krishnagiri , Krishnagiri, 252 people,stranded , Maharashtra
× RELATED நோய் தொற்றில் இருந்து...