×

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் டோக்கன், ஆதார் நகல் இருந்தால் மட்டுமே குடிமகன்களுக்கு மதுபாட்டில் கிடைக்கும்: நேரம், கிழமைகளும் ஒதுக்கீடு செய்யப்படுகிறது

விழுப்புரம்: தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடை மீண்டும் திறக்கும் பட்சத்தில்  டோக்கன், ஆதார் நகல் இருப்பவர்களுக்கு மட்டுமே மதுபாட்டில் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாடு முழுவதும்  கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி முதல்  அனைத்து  டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டன. சுமார் 42 நாட்களுக்குப்பிறகு தமிழகத்தில்  கடந்த 7ம்தேதி டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. கடை திறக்கப்பட்ட முதல்நாளே  பல கிலோமீட்டர் தூரத்துக்கு குடிமகன்கள் வரிசையில் கொளுத்தும் வெயிலையும்  பொருட்படுத்தாமல் நின்று மதுபாட்டில்களை வாங்கிச் சென்றனர். அரசு  தெரிவித்தபடி எந்தவித நிபந்தனைகளும், சமூக இடைவெளியும் பின்பற்றவில்லை. மேலும், கொரோனாவின் தாக்கம் குறையாத நிலையில் டாஸ்மாக் கடை  திறந்ததற்கு திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும், பொதுமக்கள் மத்தியிலும்  கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து டாஸ்மாக் கடைகள் திறப்புக்கு  எதிராக தொடரப்பட்ட வழக்குகளின் படி மே 17ம் தேதி  வரை ஆன்லைனில் மட்டுமே மதுபானம் விற்பனை செய்ய தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டது. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில்  மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

இன்னும் ஓரிருநாளில்  நீதிமன்ற தீர்ப்பு அரசுக்கு சாதகமாக வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஒவ்வொரு  டாஸ்மாக் கடைகளுக்கும், கடை எண்ணோடு கூடிய டோக்கன்முறை  அமல்படுத்தப்படஉள்ளதாம். அதில், கடை எண், வண்ணம், கிழமை உள்ளிட்டவைகள்  குறிப்பிடப்பட்டிருக்கும். மேலும் எப்போது சரக்கு வாங்க வரவேண்டும் என்ற  நேரமும் குறிப்பிடப்பட்டு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். ஒரு மணிநேரத்துக்கு  100 டோக்கன்களுக்கு மட்டுமே சரக்கு விற்பனை செய்யப்பட உள்ளது. இந்த  டோக்கன்களை காவல்துறை மூலம் விநியோகம் செய்யவும் ஏற்பாடு  செய்யப்பட்டுள்ளதாம். அதில், கிழமை, நேரம் குறிப்பிடப்பட்டுள்ளது.  டோக்கன்களை பெறுவதற்கு ஆதார்நகல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாம். ஒருமுறை  பெறக்கூடிய டோக்கன்களை அடுத்தவாரம் அதேக்கிழமைகளில் குறிப்பிட்ட  டாஸ்மாக்கடைக்கு சென்று மதுபாட்டில்களை வாங்கிச் செல்ல ஏதுவாக நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளது. இதனால் மூலம் டாஸ்மாக்கடை முன்பு தேவையில்லாத  கூட்டம் கூடுவதையும், குடிமகன்கள் வெயிலில் நீண்டநேரம் காத்திருப்பதை  தவிர்க்க முடியும் என்கின்றனர் அதிகாரிகள். அதன்படி, நேற்று விழுப்புரம்,  கள்ளக்குறிச்சியில் திறக்கப்பட்ட 155 கடை மேற்பார்வையாளர்கள்  வரவழைக்கப்பட்டு இந்த டோக்கன்கள் வழங்கப்பட்டு வருவதாக தெரிகிறது.


Tags : Citizens ,Tamil Nadu ,Task Shop ,Evenings , Citizens ,liquor , Token,Aadhaar copies , allotted
× RELATED 3ம் ஆண்டை நிறைவு செய்த தமிழக அரசுக்கு செல்வப்பெருந்தகை வாழ்த்து