வாசிக்க மறந்த இசைக்கருவிகளால் வசிக்க வழியின்றி திணறும் கிராமிய கலைஞர்கள்: திருவிழாக்களுக்கு தடையை நீக்குமா அரசு?

பாவூர்சத்திரம்: ஊரடங்கில் 34 வகை தொழில் நிறுவனங்களுக்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் திருமணம், விழாக்களுக்கு கட்டுப்பாடுகள் தொடர்வதால் தவில், நாதஸ்வர கலைஞர்கள் வறுமையின் கோரப்பிடியில் சிக்கி தவிக்கின்றனர். தென்மாவட்டங்களிலுள்ள கிராமங்களிலும் நகர்ப்புறங்களிலும் ஏராளமான கோயில்கள் அமைந்துள்ளன. இக்ேகாயில்களில் ஒவ்வொரு ஆண்டும் மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி மாதங்களில் பல்வேறு திருவிழாக்கள் நடத்தப்படுவது வழக்கம். பங்குனி மாதம் குலதெய்வ வழிபாட்டிற்காக வரும் மக்கள் பலர் தங்களது ஊரில் அமைந்துள்ள பிரபல கோயில்களின் கொடை விழாக்கள் முடிந்த பிறகு ஊர் திரும்புவதை வழக்கமாக கொண்டிருந்தனர். இந்த திருவிழாக்கள் மூலம் பலூன், பஞ்சுமிட்டாய், ராட்டினங்கள், நடைபாதை டீ, கஞ்சி, இனிப்பு-காரம் விற்பவர்கள் போன்ற சிறு வியாபாரிகள் முதல் தவில், நாதஸ்வர கலைஞர்கள், வில்லிசை, கனியான் கூத்து கலைஞர்கள், பந்தல் அலங்காரம், மைக்செட் அமைப்பவர்கள் முதல் விவசாயிகள் வரை பலருக்கு வாழ்வளிக்கும் நிகழ்ச்சியாகவும் அமைந்திருக்கும்.

ஆனால் இந்த ஆண்டு கடந்த ஜனவரி இறுதியில் பரவ துவங்கிய கொரோனா வைரசிலிருந்து மக்களை பாதுகாக்க மார்ச் 24 முதல் தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மே 17 வரை தொடரும் இந்த ஊரடங்கால் சிறு வியாபாரிகள், தவில், நாதஸ்வர, வில்லிசை, பந்தல், கனியான் கூத்து கலைஞர்கள் வாழ்க்கை மிகுந்த போராட்ட களத்தில் சிக்கி தவிக்கிறது. ஊரடங்கு தொடர்ந்தால் பலரின் வாழ்க்கை கடன் சுழலில் சிக்கி மறைந்து விடும் என்பதால் கடந்த 4ம் தேதி ஒரு சில நிறுவனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டது. இது விரிவாக்கப்பட்டு கடந்த 11ம் தேதி முதல் 34 வகை நிறுவனங்கள் சமூக விலகலை கடைப்பிடித்து பணிகளை துவங்க அரசு அனுமதியளித்துள்ளது. இதனால் கொரோனா பரவல் தடுப்பு ஊரடங்கு காலத்திலும் பல இடங்களில் முழு இயல்பு நிலை திரும்பியுள்ளது. பல்லாயிரக்கணக்கானோர் ஒரே இடத்தில் குவியும் டாஸ்மாக் கடைகளை இரண்டு நாள் திறந்த தமிழக அரசு உயர்நீதிமன்ற தடையை அடுத்து கடைகளை மூடிவிட்டு உச்சநீதிமன்றம் சென்றுள்ளது. ஆனால் சொற்ப மக்கள் கூடும் கோயில் விழாக்கள், திருமணங்கள், துக்க நிகழ்வுகள் போன்றவற்றிற்கு அரசு தொடர்ந்து தடை விதித்துள்ளது.

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டத்திற்குட்பட்ட பல கிராமங்களில் கோயில் திருவிழாக்கள் மாசியில் துவங்கி வைகாசி வரை நடைபெறுவது வழக்கம். இந்த 4 மாதகால தொழிலில் கிடைக்கும் வருவாயை நம்பி ஆண்டு முழுவதும் வாழ்க்கை நடத்தும் ஆயிரக்கணக்கான தவில், நாதஸ்வரம், வில்லிசை, கனியான் கூத்து கலைஞர்கள் தற்போது ஒருவேளை சோற்றுக்கே பிறரை நம்பி நிற்கும் நிலை உருவாகி விட்டது. இதுகுறித்து தென்காசி வட்டார தவில், நாதஸ்வரம், வில்லிசை, கனியான்கூத்து கலைஞர்கள் கூறுகையில், கீழப்பாவூர், மேலப்பாவூர், குறும்பலாப்பேரி, அருணாப்பேரி, முத்துகிருஷ்ணப்பேரி, பாவூர்சத்திரம், கல்லூரணி, ஆவுடையானூர், அரியப்புரம், ஆலங்குளம், கடையம், மத்தளம்பாறை, மடத்தூர், அச்சன்புதூர், நெடுவயல், வடகரை, கடையநல்லூர், கள்ளாம்புளி, சுரண்டை, புளியங்குடி, வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில், சிவகிரி, பாப்பாங்குளம், கரிவலம்வந்தநல்லூர் உட்பட பல ஊர்களில் சுமார் 500க்கும் மேற்பட்ட மேளம், நாதஸ்வரம் மற்றும் கிராமப்புற கலைஞர்கள் உள்ளனர்.கோயில் கொடை விழாக்கள், திருமணம் போன்ற விசேஷ நிகழ்ச்சிகள் மட்டுமே எங்களின் வருவாய்க்கு மூலாதாரம். ஒரு ஆண்டில் 4 மாதங்களில் கிடைக்கும் வருமானத்தை கொண்டே மீதமுள்ள 8 மாதங்களை நாங்கள் கழித்து வருகிறோம். தமிழகத்தில் தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவால் கோயில், திருமண விழாக்கள் தடைபட்டுள்ளன. இதனால் சீசன் காலமான தற்போது வேலையின்றி, வருவாயின்றி உணவிற்கே திண்டாடும் நிலையில் உள்ளோம்.

அனைத்து சுப நிகழ்ச்சிகள் தடைபட்டிருப்பதால் ஏற்கனவே வாங்கியிருந்த ஆர்டர்களுக்கான முன்பணத்தை திரும்ப கேட்கின்றனர். ஆனால் அவற்றை செலவழித்து விட்டதால் எங்களால் அவற்றை திருப்பி கொடுக்க முடியாமல் கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். சமீபகாலமாக தவில், நாதஸ்வரம், வில்லிசை கலைகளுக்கு முந்தைய காலம் போன்று இல்லாமல் வரவேற்பும், வருமானமும் குறைந்து வருவது எங்களை வேதனை அடையச் செய்துள்ளது. நாட்டுப்புற நல வாரியத்தில் உறுப்பினராக இருந்தும் சரியான முறையில் நிவாரணமும் கிடைக்கவில்லை. எனவே அரசு எங்களைப் போன்ற நலிவடைந்த கலைஞர்களுக்கு போதிய நிவாரண உதவி வழங்க வேண்டும். இது மாதிரியான கிராமிய கலைகள் அழிந்து போகாமல் தடுக்க அரசு நிகழ்ச்சிகளில் வாய்ப்புகள் வழங்க வேண்டும். மீண்டும் கோயில் விழாக்கள் நடைபெற அனுமதி அளிக்க வேண்டும் என்றனர். கோயில் கொடை விழாக்கள், திருமணம் போன்ற விசேஷ நிகழ்ச்சிகள் மட்டுமே எங்களின் வருவாய்க்கு மூலாதாரம். ஒரு ஆண்டில் 4 மாதங்களில் கிடைக்கும் வருமானத்தை கொண்டே மீதமுள்ள 8 மாதங்களை நாங்கள் கழித்து வருகிறோம்.

Related Stories:

>