×
Saravana Stores

வறுத்தெடுக்கும் கோடை வெயில் குட்டை போல் மாறிய பச்சையாறு அணை: விவசாயிகள் கவலை

களக்காடு: வறுத்தெடுக்கும் கோடை வெயிலால் களக்காடு பச்சையாறு அணை தண்ணீர் வறண்டு குட்டை போல் காட்சி அளிக்கிறது. இதனால் விவசாயிகள் கவ லை அடைந்துள்ளனர். நெல்லை மாவட்டம், களக்காடு அருகே உள்ள மஞ்சுவிளை மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் பச்சையாறு அணை அமைந்துள்ளது. இந்த அணையின் மொத்த நீர்மட்டம் 50 அடி ஆகும். இந்த அணையின் மூலம் களக்காடு, நாங்குநேரி பகுதியில் உள்ள 110 குளங்கள் பயன் பெற்று வருகின்றன. இதன் மூலம் 10 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசனம் பெறுகின்றன. பச்சையாறு அணை கடந்த 2001ம் ஆண்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது. அப்போது அணை முழு கொள்ளளவான 50 அடியை எட்டியது.
அதன்பின் கடந்த 2009, 2014, 2015ம் ஆண்டு மழையின் போது அணை நிரம்பி ததும்பியது. அதன் பின்னர் அணை நிரம்பாமலிருந்தது. அணை முழு கொள்ளளவை எட்டுவதற்கு முன்பே தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. அணைக்கு தேங்காய் உருளி அருவி அருகே உள்ள ஊட்டு கால்வாய் மூலமே தண்ணீர் திறக்கப்படுகிறது. அதுதவிர கீரைக்காரன் தொண்டு மலையில் பெய்யும் தண்ணீரும் அணைக்கு வந்து சேர்கிறது.

இந்நிலையில் களக்காடு பகுதியில் பெய்த வடகிழக்கு பருவமழையின் காரணமாக கடந்த டிசம்பர் மாதம் 28ம் தேதி அணை 5வது முறையாக நிரம்பி ததும்பியது. அதன் பின் கடந்த ஜனவரி மாதம் விவசாயத்திற்காக அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதற்கிடையே கடந்த மார்ச் மாதம் முதல் களக்காடு பகுதியில் வெயில் சுட்டெரித்து வருகிறது. கத்திரி வெயில் என்று அழைக்கப்படும் அக்னி நட்சத்திரம் தொடங்கிய நிலையில் களக்காடு பகுதியில் கடந்த சில நாட்களாக பகலில் வெயில் கொளுத்துவதும், மதியத்திற்கு பின்னர் மழை வருவது போல் வானம் மேகக்கூட்டங்களாகவும் காணப்பட்டு வருகிறது.வறுத்தெடுக்கும் வெயிலால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்தது. தற்போது அணையின் நீர்மட்டம் 10 அடியாக குறைந்துள்ளது. இதையடுத்து தண்ணீர் வறண்டு அணை குட்டை போல் காணப்படுகிறது. இதே நிலை நீடித்தால் தண்ணீர் முழுவதுமாக வற்றி குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நிலவுவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். எனவே கோடை மழை பொழியுமா? என விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Tags : Green Bay Dam , Green Bay Dam, roasted summer ,farmers', concern
× RELATED வளர்ச்சியடையும் பின்னலாடை துறை தொழில்துறையினர் கோரிக்கை நிறைவேறுமா?