மஞ்சி தயாரிப்பு பணி முடக்கம்: 12 ஆயிரம் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழப்பு

பொள்ளாச்சி: கோவையில் மஞ்சி தயாரிக்கும் பணி முடங்கியுள்ளதால் 12 ஆயிரம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. தமிழக அரசின் கொரோனா தடுப்பு ஊரடங்கு காரணமாக, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் உள்பட அனைத்து தொழில்களும் முடங்கி கிடக்கின்றன. விவசாயம் சார்ந்த மஞ்சி தயாரிப்பு தொழிலும் தப்பவில்லை. கோவை மாவட்டம் கிணத்துக்கடவு, நெகமம், பொள்ளாச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தென்னை நாரை கொண்டு உருவாக்கப்படும் மஞ்சி, உலகம் முழுவதும் பிரபலமாகியுள்ளது. ஆனால், தற்போது ஊரடங்கு உத்தரவால் இத்தொழில் முடங்கியுள்ளன. கோவை மாவட்டத்தில் மட்டும் சுமார் 12 ஆயிரம் தொழிலாளர்கள், இத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஒன்றரை மாதமாக தொழில் அடியோடு பாதித்துள்ளதால், இவர்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி இருக்கிறது.உரமாக பயன்படுத்த, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இத்தொழில், இனிவரும் காலங்களில் சிறப்பாக இருக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளதாக தொழில் முனைவோர் அஞ்சுகின்றனர். பொருளாதார ரீதியாக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து, நிதி உதவி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன், இத்தொழிலில் உள்ள குடும்பம் ஒன்றுக்கு தலா ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இது குறித்து கோவை மாவட்ட தென்னை நார் உற்பத்தியாளர்கள் சங்க துணை தலைவர் சுதாகர் கூறியதாவது: கோவை மாவட்டத்தில் உற்பத்தியாகும் தென்னை நாரில்,  சுமார் 85 சதவீதம், சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆனால், கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்து கொரோனா பரவல் காரணமாக, தென்னை நார் ஏற்றுமதி நிறுத்தப்பட்டு விட்டது. அன்று முதல் இன்று வரை தென்னை நார் (மஞ்சி) உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், கோவை சுற்று வட்டார பகுதி மற்றும் பொள்ளாச்சி பகுதியில் உள்ள அனைத்து தென்னை நார் தொழிற்சாலைகளும் முடங்கி கிடக்கின்றன. உற்பத்தி செய்த மஞ்சி தேக்கமடைந்து கிடக்கிறது. வடமாநில தொழிலாளர்கள் இல்லாததால், தொழிற்சாலைகள் வெறிச்சோடியுள்ளது.  இதனால், கோவை மாவட்டத்தில் மட்டும்  நாள் ஒன்றுக்கு ரூ.3 கோடி மதிப்புள்ள 2,500 டன் தென்னை நார் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

உற்பத்தியாளர்களுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தொழிலாளர்கள் முற்றிலும் வேலைவாய்ப்பு இழந்துள்ளனர். அடுத்து, பருவமழை பெய்தால் தென்னை நார் உற்பத்தி மேலும் பாதிப்படையும் நிலை உருவாகும். ஏற்கனவே, தென்னை நார் உற்பத்தியாளர்கள், வங்கியில் வாங்கிய கடன்களுக்கு வட்டி செலுத்த முடியாத நிலையில் உள்ளனர். மீண்டும் இத்தொழில் மீது பேரிடி விழுந்தால் என்ன செய்வது என்றே தெரியவில்லை. மத்திய-மாநில அரசுகள் கை கொடுத்தால் மட்டுமே இத்தொழில் பிைழக்கும். இவ்வாறு சுதாகர் கூறினார். கோவை மாவட்டத்தில் மட்டும்  நாள் ஒன்றுக்கு ரூ.3 கோடி மதிப்புள்ள 2,500 டன் தென்னை நார் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>