×

ஊரடங்கால் சாலையிலேயே குழந்தையை பெற்றெடுத்த புலம்பெயர் தொழிலாளி பெண் : பிரசவத்திற்கு பின் 150 கி.மீ. நடைபயணம்

போபால் : மகாராஷ்டிராவில் இருந்து மத்தியப்பிரதேசத்திற்கு நடந்தே சென்ற புலம்பெயர் தொழிலாளர் குடும்பத்தை சேர்ந்த கர்ப்பிணிக்கு சாலையிலேயே பிரசவம் நடந்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஊரடங்கு உத்தரவிற்கு பின் நாடு முழுவதும் உள்ள தொழிற்சாலைகள் மூடப்பட்டன.இதனால் தினக்கூலி தொழிலாளர்கள் பலரும் வேலையின்மை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதே சமயம் புலம்பெயர் தொழிலாளர்கள் பலரும் அவர்களின் சொந்த ஊருக்கும் செல்ல முடியாமல் அவதிப்பட்டு வந்தனர். வேலை, உணவு இல்லாமல் சிரமத்தில் இருந்த அவர்களை சொந்த ஊர் அழைத்துச் செல்ல மத்திய அரசு சிறப்பு ரயில்களை ஏற்பாடு செய்து அனுப்பி வைத்து வருகிறது. ரயில் வசதி மற்றும் பேருந்து வசதி செய்துதரப்படாத இடங்களில் பல தொழிலாளர்கள் நடைபயணமாகவே சொந்த ஊருக்கு திரும்பி வருகின்றனர். வழியில் கிடைக்கும் உணவுகளை சாப்பிட்டுக் கொண்டு பல நாட்கள் நடந்து பயணம் செய்கின்றனர்.

இந்நிலையில் மகாராஷ்டிராவின் நாசிக்கில் வேலை பார்த்து வந்த கர்ப்பிணியும், அவரது கணவரும் போக்குவரத்து வசதி இல்லாததால் நடந்தே ஊர் திரும்ப முடிவு செய்தனர். மத்தியப்பிரதேசத்தில் உள்ள தங்களது சொந்த ஊருக்கு திரும்ப நடைபயணத்தை ஆரம்பித்தனர். ஆனால் வழியிலேயே அந்த கர்ப்பிணிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. பின்னர் வேறு வழியில்லாமல் சாலையிலேயே அந்த பெண்ணிற்கு பிரசவம் நடந்துள்ளது. பின்னர் 2 மணி நேரம் மட்டும் ஓய்வு எடுத்து விட்டு மீண்டும் 150 கி.மீ நடந்து சொந்த கிராமத்தை அடைந்துள்ளனர்.

அவர்கள் மத்தியப்பிரதேச எல்லையை அடைந்த பிறகு, பேருந்து மூலம் ஊருக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தை அறிந்த அம்மாவட்ட மருத்துவ அதிகாரிகள், அந்தப் பெண்ணையும் குழந்தையையும் மருத்துவமனையில் அனுமதித்து பரிசோதனை செய்தனர். தாயும், சேயும் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சொந்த ஊருக்கு திரும்பும் வழியிலேயே கர்ப்பிணி குழந்தையை பெற்றெடுத்து, 2 மணி நேரம் மட்டுமே ஓய்வெடுத்து தனது பயணத்தை மீண்டும் தொடர்ந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்னதாக தெலங்கானாவில் இருந்து சண்டிகருக்கு தனது கணவருடன் நடந்து சென்ற கர்ப்பிணி ஒருவர் சாலையிலேயே குழந்தை பெற்றெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Migrant worker ,baby ,delivery Hiking ,curtain road , Curfew, road, child, immigrant, worker, woman, childbirth, 150km. , Hiking
× RELATED பலூன் விளையாட்டும்… குழந்தை செல்லூர் ராஜூம்…