×

வருமானம் இன்றி தொழிலாளர்கள் பாதிப்பு நாமக்கல், கரூர், சேலத்தில் தேங்கி கிடக்கும் துணிகள்: ஈரோடு கொண்டு செல்ல உதவ கோரிக்கை

ராசிபுரம்:  நாமக்கல், சேலம், கரூர் பகுதி ஜவுளிகளை ஈரோடு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை எழுந்துள்ளது. தமிழகத்தில் நாமக்கல், சேலம், கரூர் பகுதியில் தறி கூடங்கள், விசைத்தறி கூடங்கள் அதிகளவில் உள்ளன. இப்பகுதியில் உற்பத்தி செய்யப்படும் துணி வகைகளுக்கு ஈரோடு சந்தையிலிருந்து நூல்களை எடுத்து வந்து பிரித்து துணிகளாக மாற்றி மீண்டும் திருப்பி தருவது நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த 45 நாட்களுக்கும் மேலாக ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் தறிதொழிலாளர்கள், முதலாளிகள் உள்ளிட்டோர் வேலை இன்றி தவிப்பில் இருந்து வருகின்றனர். ஊரடங்கிற்கு முன், முடிக்கப்பட்ட லட்சக்கணக்கான மீட்டர் துணிகள் ஏற்றுமதிக்காக காத்திருக்கிறது. பொது போக்குவரத்து தடை செய்யப்பட்ட நிலையில், மொத்த ஜவுளி ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வருவாயின்றி தொழிலாளர்கள் தவித்து வருகின்றனர். வேலை இல்லாத தொழிலாளர்களுக்கு முதலாளிகள் முன்பணம் தருவது வழக்கம். ஆனால் கடந்த 40 நாட்களுக்கு மேலாக பணப் பரிமாற்றம் இல்லாததால் தொழிலாளர்களுக்கு முன் பணம் தர முடியாத நிலை உள்ளது. எனவே உற்பத்தி செய்யபட்ட ஜவுளி பொருட்களை விற்பனைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து விசைத்தறி உரிமையாளர் சரவணன் கூறியதாவது, சேலம், நாமக்கல், கரூர் மாவட்டங்களில் ஜவுளி உற்பத்தி அதிகளவில் உள்ளது. 5 தறிகள் முதல் 20 தறிகள் வைத்திருக்கும் சிறிய தறி உரிமையாளர்கள்தான் அதிகம். ஜவுளி தொழிலில் வரவுக்கும் செலவுக்கும் தான் கணக்காக இருக்கும். நாமக்கல் மாவட்டம்  ராசிபுரம், வெண்ணந்தூர், குருசாமிபாளையம், குறுக்குபுரம், கூனவேலம்பட்டிபுதூர், அத்தனூர், ஓலப்பட்டி, புதுப்பாளையம், சீராப்பள்ளி, காக்காவேரி, பாய்ச்சல், புதுச்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட தறிகள் உள்ளன. இங்கு ஏராளமான தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பணியாற்றி வருகின்றனர். தற்போது ஊரடங்கால் முதலாளிகள் முதல் தொழிலாளர்கள் வரை கடுமையாக பாதிப்படைந்துள்ளனர்.  

இங்கு உற்பத்தி செய்யப்படும் துணிகள் ஈரோடு சென்று அங்கிருந்து இந்தியா முழுவதும் அனுப்பப்படுகிறது. குறிப்பாக ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட பகுதிகளுக்கும் துணிகள் செல்கிறது. தற்போது நாமக்கல், சேலம் மற்றும் கரூர் பகுதிகளில் உற்பத்தி செய்யப்பட்ட ஜவுளிகள் அனைத்தும் தேங்கியுள்ளது. எனவே நாமக்கல், சேலம்,கரூர் பகுதிகளில் தேக்கமடைந்த ஜவுளிகளை ஈரோடு கொண்டு செல்ல மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் தொழிலாளர்களின் நலன் கருதி உணவு வழங்க விசைதறி தொழிலாளர்கள் சங்கங்கள் சார்பில் ஏற்பாடு செய்யபடும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Workers Without Income Namakkal ,Karur ,Namakkal ,Salem , Impact, workers without , Namakkal, Karur, Salem
× RELATED கரூரில் கொல்லிமலை செட் மளிகை பொருட்கள் விற்பனை அமோகம்