×

4-ம் கட்ட ஊரடங்கில் என்ன செய்ய வேண்டும்?: அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி இன்று காணொலி காட்சி மூலம் ஆலோசனை...!

சென்னை: கொரோனா பாதிப்பால் கடந்த மார்ச் 25ம் தேதி நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. 3 கட்டங்களாக நீட்டிக்கப்பட்ட இந்த ஊரடங்கு தற்போது 49 நாட்களை கடந்துள்ள நிலையில், மே 17ம் தேதியோடு முடிவடைகிறது.  மக்கள் அனைவரும் வீடுகளுக்குள் முடங்கி, தொழில் நிறுவனங்கள் மூடப்பட்ட போதிலும், வைரஸ் தொற்றின் தீவிரம் குறைந்தபாடில்லை. கடந்த சில நாட்களாக வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ளது.  இதற்கிடையே, மே 17ம் தேதிக்கு  பிறகான திட்டம் குறித்து அனைத்து மாநில முதல்வர்களுடன் நேற்று முன்தினம் வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார்.

தொடர்ந்து, 3ம் கட்ட ஊரடங்கு முடிய இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் பிரதமர் மோடி, 5வது முறையாக நேற்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அதில் அவர் கூறியதாவது: நம் நாடு கொரோனாவை எதிர்த்து  போராடுவதால், நாட்டின் பொருளாதாரத்தை ஊக்குவிக்க ரூ.20 லட்சம் கோடிக்கான சலுகையை அறிவிக்கிறேன் என்றார்.

குறிப்பாக, நாட்டின் 4ம் கட்ட தேசிய ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படுவது மற்றவற்றில் இருந்து முற்றிலும் வித்தியாசமானதாக இருக்கும். 4ம் கட்ட ஊரடங்கை நீட்டிப்பது பற்றி மாநில அரசுகளே முடிவெடுக்கலாம். மாநில அரசுகளின்  பரிந்துரைப்படி 4ம் கட்ட ஊரடங்கு நீட்டிக்கப்படும். இதுதொடர்பான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் மே 18ம் தேதிக்கு முன் வெளியிடப்படும் என்றார்.

ஊரடங்கு நீட்டிக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்த நிலையில், இன்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தவுள்ளார்.  கூட்டத்தில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்,  ஊரடங்கை தளர்த்துதல், பேருந்து போக்குவரத்தை தொடங்குவது, மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வோருக்கு அனுமதி அளித்தல், இன்னும் திறக்கப்படாத கடைகள் போன்றவை குறித்து,  ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமை செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், டிஜிபி திரிபாதி  உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர்.

Tags : phase , What should be done in the 4th phase of the curfew?
× RELATED 4ம் கட்ட தேர்தல் 96 தொகுதியில் மனு தாக்கல் துவக்கம்