×

நாட்டின் முதல் கொரோனா வைரஸ் பரிசோதனை பஸ்: மும்பை ஐஐடி முன்னாள் மாணவர்கள் சாதனை

மும்பை: மும்பை ஐ.ஐ.டி.யில் படித்த முன்னாள் மாணவர்கள் இந்தியாவின் முதலாவது கொரோனா வைரஸ் பரிசோதனை பஸ்சை  உருவாக்கி சாதனை படைத்துள்ளனர். கொடோய் டெக்னாலஜி ஸ்டாக் ( Kodoy Technology Stack)  என்ற தொழில்நுட்ப நிறுவனத்துடன் இணைந்து மும்பை ஐ.ஐ.டி. முன்னாள் மாணவர்கள் கவுன்சில், இந்த நவீன கொரோனா வைரஸ் பரிசோதனை பஸ்சை வடிவமைத்துள்ளனர். டெலிரேடியாலஜி தொழில்நுட்பம் மற்றும் வைரஸ் அறிகுறி உள்ள நபர்களிடம் தொடர்பு கொள்ளாமல் அவர்களது தொண்டைச் சளி மாதிரியை சேகரித்து பரிசோதனை செய்யும் விதமாக நவீன் தொழில்நுட்பத்துடன் இந்த பஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பஸ்சில் டிஜிடிட்டல் எக்ஸ்ரே, டெலிரேடியாலஜி கருவி, நோயாளியின் தொடர்பு இல்லாமல் அவரது தொண்டைச் சளி மாதிரியை சேகரித்து உடனடியாக ஆர்.என்.ஏ. பரிசோதனை நடத்தும் வசதிகள் உள்ளன. 384 சதுர அடி உள்பரப்பளவு கொண்ட இந்த பஸ் கடுமையான மழைக்காலத்திலும் செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

வயர்லெஸ் ரோபோடிக் டெலி ஆபரேட்டிங் அல்ட்ராசவுண்ட் மூலம் நூரையீரலை பரிசோதிக்கும் வசதியும் இந்த பஸ்சில் இடம் பெற்றுள்ளது. இந்த பஸ்சில் உள்ள மேற்கண்ட நவீன மற்றும் ரோபோடிக் கருவிகள் மூலம் மிகக்குறைந்த செலவில் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்து உடனுக்குடன் முடிவுகளை தெரிந்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. சாதாரணமாக தற்போது ஒருவருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்ய தனியார் ஆய்வுக்கூடங்களில் ₹4,500 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால், இந்த பஸ்சில் நடத்தப்படும் பரிசோதனைக்கு சாதாரணமாக வசூலிக்கப்படும் கட்டணத்தில் வெறும் 20 சதவீதம் மட்டுமே செலவாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது மும்பையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த கொரோனா பரிசோதனை பஸ், நகரின் குடிசைப் பகுதிகளுக்கு சென்று வைரஸ் அறிகுறி உள்ளவர்களுக்கு பரிசோதனை நடத்தி வருகிறது.



Tags : India ,Mumbai IIT ,alumni , Corona Virus, Bus, Mumbai IIT, Alumni
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!