×

தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப பேருந்துகள் ஏற்பாடு செய்த நடிகர் சோனு சூட்

தமிழில் கள்ளழகர், நெஞ்சினிலே, கோவில்பட்டி வீரலட்சுமி, ராஜா, சந்திரமுகி, ஒஸ்தி, அருந்ததி, தேவி உள்பட பல படங்களில் வில்லனாக நடித்தவர் சோனு சூட். தற்போது பாலிவுட்டில் முன்னணி வில்லன் நடிகராக இருக்கிறார். மேலும், பல மொழி படங்களில் நடித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் மகாராஷ்டிரா மற்றும் கர்நாடக அரசுகளிடம் முறைப்படி அனுமதி பெற்று, சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் சிக்கித் தவித்த புலம்பெயர்ந்த பணியாளர்களுக்காக 10 சொகுசு பேருந்துகளை இலவசமாக ஏற்பாடு செய்தார். இது சமூக வலைத்தளங்களில் வெளியாகி அவருக்கு பாராட்டு கிடைத்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் தொடங்கிய கொரோனா ஊரடங்கு காரணமாக, புலம்பெயர்ந்த மற்றும் மற்ற மாநிலங்களில் தினக்கூலியாக பணியாற்றும் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளனர். பொது போக்குவரத்து வசதி முடக்கப்பட்டுள்ளதால், தங்கள் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தவித்தனர். இதையறிந்த சோனு சூட், அந்த தொழிலாளர்களுக்காக சொகுசு பேருந்துகள் ஏற்பாடு செய்தார். அதன்படி திங்களன்று தானேவில் இருந்து 10 பேருந்துகள் கர்நாடகாவின் குல்பர்கா பகுதிக்கு சென்றது. முன்னதாக முகக்கவசம் அணிந்து பேருந்து நிலையத்துக்கு வந்த சோனு சூட், தொழிலாளர்களை கையசைத்து வழியனுப்பி வைத்தார்.

அப்போது அவர் கூறியதாவது: சின்னச்சின்ன குழந்தைகள் மற்றும் வயதான பெற்றோர்கள் கடுமையாக சுட்டெரிக்கும் வெயிலில், மிகவும் சிரமப்பட்டு சாலைகளில் நடந்து சென்றதை பார்த்து கண் கலங்கினேன். இதுபோல் மற்ற மாநில தொழிலாளர்களுக்கும் போக்குவரத்து வசதி செய்து கொடுக்க தயாராக இருக்கிறேன் என்றார்.

Tags : Actor ,hometown , Workers, Hometown, Buses, Actor Sonu Suite
× RELATED மறைந்த முன்னாள் அமைச்சர் ஆர்.எம்...