×

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இடியுடன் மழை பெய்யும்

சென்னை: அந்தமான் அருகே வளிமண்டல மேல் அடுக்கில் ஏற்பட்டுள்ள காற்று சுழற்சி, காற்றழுத்தமாக மாற வாய்ப்புள்ளதால் தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தமான் பகுதியில் வளி மண்டல மேல் அடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. அது மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக  மாறும் வாய்ப்பு உருவாகியுள்ளது. மேலும் தெற்கு அந்தமான் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதி மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதியில் சூறாவளிக் காற்று  வீசும் சூழல் உருவாகியுள்ளது.

இதையடுத்து, அந்தமான் மற்றும் நிகோபார் பகுதியில் 16ம்தேதி முதல் தென் மேற்கு பருவமழை பெய்யத் தொடங்குவதற்கான சூழ்நிலையும் உருவாகியுள்ளது. புதுக்கோட்டை திருவாரூர், சீர்காழி, சிதம்பரம், விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, புதுச்சேரி,  விருத்தாசலம், ஆகிய பகுதிகளில் நேற்று மாலை இடியுடன்கூடிய  பலத்த மழை பெய்தது.  இதன் தொடர்ச்சியாக அரியலூர், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர் நாகபட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்.

கன்னியாகுமரி மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்புள்ளது. தென் கிழக்கு வங்கக் கடலில் மணிக்கு 40 கிமீ வேகம் முதல் 50 கிமீ வேகத்தில் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர தமிழகத்தில் திருச்சி, கரூர், சேலம், தர்மபுரி, மாவட்டங்களில் அதிகபட்சமாக 104 டிகிரி வெயில் கொளுத்தும் என்பதால் பொதுமக்கள் வெளியில் வர வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.


Tags : Tamil Nadu ,districts ,families ,Thunder , amil Nadu, rain
× RELATED மோடியை மிஞ்சும் வகையில் வியூகம்;...