×

திருப்பூரில் சொந்த மாநிலம் அனுப்பக் கோரி போராட்டத்துக்கு திரண்ட வடமாநில தொழிலாளர்கள்: போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்

திருப்பூர்: சொந்த ஊருக்கு அனுப்பக்கோரி திருப்பூரில் வடமாநில தொழிலாளர்கள் நேற்று போராட்டத்துக்கு திரண்டனர். லேசான தடியடி நடத்தி போலீசார் அவர்களை கலைத்தனர். திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களில் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். ஊரடங்கு காரணமாக வடமாநில தொழிலாளர்கள் இங்கிருந்து தங்கள் சொந்த ஊருக்கு செல்லும் முயற்சியில் உள்ளனர். பல மாவட்டங்களில் போராட்டத்தில் ஈடுபட்டதால் கடந்த 2 நாட்களாக வடமாநில தொழிலாளர்கள் சிறப்பு ரயில்களில் சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் திருப்பூர் பிச்சம்பாளையம் புதூரில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பக்கோரி  நேற்று போராட்டத்தில் ஈடுபட திரண்டனர். தகவலறிந்த அனுப்பர்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சொந்த ஊர் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கூறினர்.

ஆனாலும் போலீசாரின் பேச்சுவார்த்தையை மீறி வட மாநில தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதையடுத்து போலீசார் லேசான தடியடி நடத்தி அவர்களை அங்கிருந்து கலைத்தனர். இதனால் அந்த இடத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. ரயிலில் அனுப்பி வைப்பு: திருப்பூரில் ஒடிசா, பீகார், உத்தரபிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களை சேர்ந்த சுமார் 2 லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். கொரோனா ஊரடங்கால் வெளி மாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.  இந்த நிலையில், திருப்பூரில் உள்ள தொழிலாளர்கள் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் ஆதார், செல்போன் எண்களை கொடுத்து சொந்த ஊர் செல்ல பதிவு செய்தனர்.

மேலும், பலர் ஆன்லைனிலும் பதிவு செய்தனர்.  இதையடுத்து திருப்பூரில் இருந்து பீகார் முஜாப்பூருக்கு கடந்த 10ம் தேதி இயக்கப்பட்ட சிறப்பு ரயிலில் அம்மாநிலத்தை சேர்ந்த 1,140 பேர் அனுப்பி வைக்கப்பட்டனர்.   இந்நிலையில், இரண்டாம் கட்டமாக திருப்பூரிலிருந்து பீகார் மாநிலம் ஹாஜ்பூருக்கு நேற்று மதியம் 1.20 மணிக்கு சிறப்பு ரயில் 24 பெட்டிகளுடன் இயக்கப்பட்டது. இந்த ரயிலில் 22 பெண்கள், 17 குழந்தைகள் உள்பட 1,464 தொழிலாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.



Tags : state workers ,home state ,Tirupur ,state , Tirupur, Struggle, Northern Territory Workers, Police
× RELATED வேட்பாளர் மாலை அணிவித்தபோது...