×

பாஜ ஆளும் மாநிலங்களில் போடப்பட்டுள்ள தொழிலாளர் விரோத உத்தரவுகளை திரும்பப் பெற வேண்டும்: பிரதமருக்கு திமுக வலியுறுத்தல்

சென்னை: பாஜ ஆளும் மாநிலங்களில் போடப்பட்டுள்ள தொழிலாளர் விரோத உத்தரவுகளையும், தொழிலாளர் சட்டங்களுக்கு எதிராக மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு துறைச் செயலாளர் அனுப்பியுள்ள சுற்றறிக்கைகளையும் திரும்பப் பெற வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை: பாஜ ஆளும் மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் ‘‘8 மணி நேர வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தி” உத்தரவிட்டிருப்பதற்கும் - உடலைக் கசக்கி உதிர்த்த வியர்வையின் அடையாளமாக திகழும் தொழிலாளர்களின் உரிமைகள், பாதுகாப்புகள் ஆகியவற்றை பறிக்கும் சட்டவிரோத நடவடிக்கைகளை மத்திய பா.ஜ. அரசின் தொழிலாளர் நல அமைச்சகம், சம்பந்தம் இல்லாததைப் போல, வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதற்கும், திமுக சார்பில் கடும் கண்டனத்தை  தெரிவித்துக் கொள்கிறேன்.  

 பாஜ அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை - அப்படியே காப்பி அடித்துவரும் அதிமுக அரசு - தமிழகத்தில் அதுமாதிரி எந்த ஒரு தொழிலாளர் விரோத முடிவினையும் எடுக்க, கனவில் கூட எண்ணிப் பார்த்திடக் கூடாது என்று எச்சரிக்க விரும்புகிறேன். உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், குஜராத் மாநிலங்களில் போடப்பட்டுள்ள தொழிலாளர் விரோத உத்தரவுகளையும், தொழிலாளர் சட்டங்களுக்கு எதிராக மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத் துறைச்செயலாளர் அனுப்பியுள்ள சுற்றறிக்கைகளையும் திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

அதுமட்டுமின்றி - அனைத்து தொழிலாளர் சட்டங்களையும் தொழிற்சாலைகள் கண்டிப்பாகப் பின்பற்றிட வேண்டும் என்றும் - எந்த ஒரு தொழிலாளர் சட்டத்தையும் எந்த மாநில அரசும் புறக்கணிக்கக் கூடாது என்றும் தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையத் தலைவர் என்ற முறையிலாவது - பிரதமர் உடனே தலையிட்டு - அனைத்து மாநில அரசுகளுக்கும் சிறப்பு அறிவுரை ஒன்றினை உடனடியாக, வெளிப்படையாக அறிவித்திட வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.  



Tags : Baja ,DMK ,states ,BJP , Baja ruling states, Labor, Prime Minister, DMK
× RELATED உதவியாளர்களிடம் ரூ.4 கோடி பறிமுதல்...