×

வீட்டு தனிமையில் உள்ளவரா நீங்கள்... ரொம்ப உஷாராக இருங்க... பயன்படுத்திய மாஸ்க், கிளவுஸ்களை 72 மணிநேரம் பத்திரமாக வைக்கவும்

* மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் எச்சரிக்கை
* மீண்டும் பயன்படுத்தாத வகையில் துண்டுகளாக வெட்டிவிட வேண்டும்

சென்னை: கோவிட்-19 நோய் தொற்றுக் காரணமாக வீடுகளில் தனிமை படுத்தப்பட்டுள்ளவர்கள்  உபயோகித்த கிளவுஸ் மற்றும் மாஸ்க்குகளை அகற்றுவதற்கு முன்பு 72 மணி நேரம்  காகித பைகளில் பாதுகாப்பாக வைத்திருந்து, பின்னர் பொது கழிவுகளுடன்  வெளியேற்ற வேண்டும். முக கவசங்களை மறுஉபயோகப்படுத்த முடியாத வண்ணம் வெட்டி  துண்டுகளாக்கி வெளியேற்ற பட வேண்டும்  என தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.  இதுகுறித்து தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள நெறிமுறைகள்.பொது மருத்துவக்கழிவுகள் சுத்திகரிப்பு நிறுவனம்: கோவிட்- 19 தனிமை வார்டுகள்/ தனிமை முகாம்கள்/தனிமைப்படுத்தப்பட்ட வீடுகள், ஆய்வு மையங்கள் ஆகியவற்றிலிருந்து பெறப்படும் மருத்துவ கழிவுகள் குறித்த தகவல்களை தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்திற்கு உடனுக்குடன் தெரிவிக்க வேண்டும்.

மருத்துவ கழிவுகளை கையாளும் ஊழியர்களின் சுகாதார பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். பணிபுரியும் ஊழியர்களுக்கு மூன்றடுக்கு கவசங்கள், ஸ்ப்ளாஷ் ப்ரூஃப், ஏப்ரான்/கவுன்கள், நைட்ரைல் க்ளவுஸ், கம்பூட்ஸ், பாதுகாப்பு கண்ணாடிகள் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும். கோவிட்-19 மருத்துவ கழிவுகள் குறித்த தனியாக பதிவேடுகள் பராமரிக்கப்பட வேண்டும். மருத்துவ மனைகள்: கழிவுகளை பிரித்து நிறக்குறியீடு உள்ள கொள்கலன்களிலோ, பைகளிலோ முறையாக பிரித்து வைக்க வேண்டும். முன் எச்சரிக்கையாக கோவிட்-19 நோயாளிகளின் வார்டுகளில் உருவாகும் கழிவுகளை 2 அடுக்கு உள்ள பைகளில் ( 2 பைகளை பயன்படுத்தி) கசிவுகள் ஏற்படாமல் சேகரிக்க வேண்டும். மருத்துவ கழிவுகளை சேகரித்து பாதுகாப்பாக சேமித்து மருத்துவக்கழிவு பொது சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்ப வேண்டும்.

கோவிட் - 19 நோயாளிகளின் மருத்துவக்கழிவுகளை தனியாக பிரித்து கோவிட்-19 என்ற பெயர் சீட்டு ஒட்டப்பட்டு பாதுகாப்பாக மருத்துவ கழிவு பொது சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். இந்த கழிவுகளை வார்டுகளில் இருந்து நேரடியாக மருத்துவ கழிவு பொது சுத்திகரிப்பு நிலையத்தின் வாகனங்களில் ஏற்றி அனுப்ப வேண்டும். மருத்துவ கழிவுகள் மற்றும் திட கழிவுகளை அப்புறப்படுத்துவதற்கென்று தனித்தனியாக துப்புரவு பணியாளர்களை பணியில் அமர்த்த வேண்டும். கழிப்பறைக்கு செல்ல இயலாத கோவிட்-19 நோயாளிகளால் உபயோகப்படுத்தப்படும் டயபர்களை மருத்துவக்கழிவு கையாளும் விதமாகவே கையாண்டு அதனை மஞ்சள் நிற கொள்கலன்களில் சேகரிக்கவேண்டும்.

தனிமைப்படுத்தப்பட்ட மையங்கள்/ வீடுகள்: கோவிட்-19 நோய் தொற்று காரணமாக தனிமை படுத்தப்பட்ட மையங்கள் மற்றும் முகாம்களில் உள்ளவர்களிடம் இருந்து மருத்துவக்கழிவுகள் உருவாக்கப்பட்டால் அதனை தனியாக பிரித்து மருத்துவ கழிவுகள் சேகரிக்கப்படும் மஞ்சள் நிற கொள்கலன்களிலோ பைகளிலோ சேகரித்து, உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதி பெற்ற துப்புரவு பணியாளர்களிடம் முறையாக ஒப்படைக்க வேண்டும். பொது மக்களின் கடமைகள்: கோவிட்-19 நோய் தொற்றுக் காரணமாக வீடுகளில் தனிமை படுத்தப்பட்டுள்ளவர்கள் உபயோகித்த கை உறைகள் மற்றும் முகக்கவசங்களை அகற்றுவதற்கு முன்பு 72 மணி நேரம் காகித பைகளில் பாதுகாப்பாக வைத்திருந்து, பின்னர் பொது கழிவுகளுடன் வெளியேற்ற வேண்டும்.

முக கவசங்களை மறு உபயோகப்படுத்த முடியாத வண்ணம் வெட்டி துண்டுகளாக்கி வெளியேற்றப்பட வேண்டும். செய்யக்கூடாதவை: பிற கழிவுகளுடன் கோவிட்-19 நோயாளிகளின் கழிவுகளை சேர்க்கவோ சேமிக்கவோ கூடாது. 24 மணிநேரங்களுக்கு மேல் கோவிட்- 19 நோயாளிகளின் கழிவுகளை சேமித்து வைத்தல் கூடாது. கோவிட்- 19 அறிகுறியுள்ள பணியாளர்களை சுத்திகரிப்பு நிலையங்களில் பணிபுரிய அனுமதிக்கக் கூடாது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags : household lover , Pollution Control Board, Masks, Corona, Curfew
× RELATED தேர்தல் நிதியை சுருட்டியதாக உள்கட்சி...