×

3-ம் கட்ட ஊரடங்கு 17-ம் தேதி நிறைவடையும் நிலையில் கலெக்டர்களுடன் முதல்வர் நாளை ஆலோசனை: பொது போக்குவரத்து, வழிபாட்டு தலங்களுக்கு அனுமதி குறித்து முடிவு

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடி அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் நாளை ஆலோசனை நடத்துகிறார். அப்போது தமிழகத்தில் பஸ்கள் இயக்கம் குறித்தும், வழிபாட்டுத் தலங்களுக்கு அனுமதி வழங்குவது குறித்த அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு மக்களிடத்தில் எழுந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் அனைத்தும் முடங்கின. பிறகு கடந்த மே 4ம் தேதி முதல் ஊரடங்கு தளர்த்தப்பட்டது.

தனிக்கடைகள், தொழிற்சாலைகள், கட்டுமான பணி, 100 நாள் வேலை திட்டத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது. பின்னர் தமிழக அரசு 34 வகையான கடைகளை திறக்க அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு படிப்படியாக ஊரடங்கு உத்தரவு தளரத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஊரடங்கு வரும் 17ம் தேதியுடன் நிறைவடைகிறது. எனவே 18ம் தேதி முதல் பஸ் போக்குவரத்து மீண்டும் துவங்குமா, வழிபாட்டுத் தலங்கள் திறப்பதற்கும் அனுமதி அளிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு மக்களிடத்தில் எழுந்துள்ளது.

இதற்கிடையில் கடந்தவாரம், அனைத்து மேலாண் இயக்குனர்களுக்கும், போக்குவரத்து துறை முதன்மை செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியிருந்தார். அதில், ‘முதற்கட்டமாக தேவையான அளவுக்கு பேருந்துகளை இயக்க வேண்டும். முதற்கட்ட இயக்கத்தை பரிசீலனை செய்த பிறகே அதில் மாற்றங்கள் தேவைப்பட்டால் செய்ய வேண்டும். சாதாரண நாட்களில் தரவுகளை ஆராய்ந்து அதிக அளவிலான பேருந்துகள் தேவைப்படும் வழித்தடங்களில் பேருந்துகளை அதிகரிக்கவும். அதிகபட்சமாக அனுமதிக்கக்கூடிய மொத்த பயணிகள் திறன் 50 சதவீதத்துக்கும் குறைவாக இருக்க வேண்டும்.

பயணிகள் மாஸ்க் அணிய வேண்டும். ஏறுவதற்கும், இறங்குவதற்கும் அனுமதிக்கப்பட்ட வழிகளை பின்பற்ற வேண்டும். அமருவதற்கும், நிற்பதற்குமான இடங்களும் குறிக்கப்பட்டுள்ளது. பஸ்சில் ஏறி, இறங்கும்போதும் மற்றும் பஸ் நிறுத்தங்களில் காத்திருக்கும் போதும் ஒருவொருக்கொருவர் குறைந்தது 6 அடி தூரத்தை பராமரிக்க வேண்டும். டிரைவர்கள் மற்றும் பிற உள் ஊழியர்கள் தங்களது ஷிப்டை துவங்குவதற்கு முன்பு உடல் வெப்பநிலையை பரிசோதித்துக்கொள்ள வேண்டும்’ என்பது உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் இடம்பெற்றிருந்தது.

இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடி அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் வீடியோ  கான்பரன்சிங் மூலம் நாளை ஆலோசனை நடத்துகிறார். அப்போது, தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்த நிலவரம், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட உள்ளது. மேலும் அரசு மற்றும் தனியார், ஆம்னி பஸ்களை இயக்கலாமா  என்பது குறித்து முதல்வர், கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல, ஆட்டோ, கால் டாக்சி ஓடவும் அனுமதி அளிக்க வாய்ப்புள்ளது.

மேலும், கோயில்கள், ஆலயங்கள், மசூதிகளில் குறைந்த எண்ணிக்கையில் சமூக இடைவெளியை பின்பற்றி மத வழிபாடுகளை அனுமதிப்பது குறித்து மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும் எனக்கூறப்படுகிறது.

Tags : places ,collectors ,CM , Phase 3 Curfew, Collector, Chief, Advice
× RELATED சேலம், ஈரோட்டில் கொளுத்தும் வெயில்: 12...