×

கொரோனா ஓரளவு கட்டுக்குள் வந்தபின் தேர்வு நடத்துவதே சரியானது; 10-ம் வகுப்பு தேர்வுக்கு என்ன அவசரம்?...மு.க.ஸ்டாலின் கேள்வி

சென்னை: 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளிவைக்கக் கோரி தமிழக அரசுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழகத்தில் மார்ச் 24-ம் தேதி முதல் பொது ஊரடங்கு அமலில்  உள்ளது. வணிக நிறுவனங்கள், கல்வி நிலையங்கள், அலுவலகங்கள் மூடப்பட்டு உள்ளன. இதனையடுத்து, தேர்வு நடத்த முடியாத சூழ்நிலை உருவானதால் 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக  தமிழக அரசு அறிவித்தது. ஆனால், இன்னும் 10ம் வகுப்பு தேர்வு நடத்தப்படவில்லை. பிளஸ் 1 பொதுத்தேர்விலும் ஒரு பாடத்திற்கு தேர்வு நடத்தப்படவில்லை. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு கட்டாயம் நடைபெறும் என்று அரசு அறிவித்தது.

இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், 10-வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 1-ம் தேதி முதல் ஜூன் 12-ம் தேதி வரை நடைபெறும் என்று  அறிவித்தார். மேலும், 11-ம் வகுப்பு கடைசி தேர்வு ஜூன் 2-ம் தேதி நடைபெறும். மார்ச் 26-ல் நடைபெற இருந்த தேர்வு தள்ளிவைக்கப்பட்டதால் ஜூன் 2-ம் தேதி நடைபெறுகிறது. 12-ம் வகுப்பு கடைசி தேர்வை எழுதாத 36 ஆயிரம்  மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு ஜூன் 4-ம் தேதி நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.

12-ம் வகுப்பு மதிப்பெண் திருத்தம் பணி மே 27-ம் தேதி முதல் தொடங்கும் என்றார். தேர்வு அறையில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படும். தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பேருந்து வசதி ஏற்படுத்தி தரப்படும். மாணவர்களுக்கு தேவையான  சுகாதார வசதிகள் செய்து தரப்படும். பள்ளி திறப்பு குறித்து தற்போது எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார். இந்நிலையில், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு அறிவிப்பு குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு என்ன அவசரம்? என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

கொரோனா பீதியும் அச்சமும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு இருக்கிறது. கொரோனா அச்சம் அதிகரித்துள்ள நிலையில் தேர்வு அறிவிப்பு பெற்றோர், மாணவர்கள் மனதில் மேலும் பதற்றம் உருவாக்கும். தேர்வு தேதி அறிவிக்கும் முன்பு ஆசிரியர்-பெற்றோர் சங்க பிரதிநிதிகளோடு பரிசீலிக்கப்பட்டதா? பெற்றோர் மாணவர்களை மனரீதியாக தயார் படுத்திய பின்பு தேர்வு அறிவிப்பதே சரியாக இருக்கும். கொரோனா ஓரளவு கட்டுக்குள் வந்தபின் தேர்வு நடத்துவதே சரியானது. எனவே, 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளிவைக்கக் கோரி தமிழக அரசுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.


Tags : MK Stalin ,election , It is proper to exercise the choice after the corona is somewhat controlled; What is the urgency of the 10th grade general election?
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...