×

உருமாறும் கொரோனா வைரஸ்; தடுப்பு மருந்துகளை பயனற்றதாக மாற்றி விடும்....ஆய்வாளர்களின் கண்டுபிடிப்பால் அதிர்ச்சி

பெய்ஜிங்: கொரோன வைரசுக்கு எதிராக தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதற்காக உலகம் முழுவதும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில், அதிலிருந்து தப்பிக்கும் வகையில் கொரோனா வைரஸ் தன்னை உருமாற்றிக்கொள்ளத் தொடங்கியுள்ளதாக அதிர்ச்சியளிக்கும் தகவலை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். சீனாவின் வுகான் மாகாணத்தில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. இது தற்போது 200 நாடுகளில் பரவியுள்ளது. வைரஸ் தொற்றால் உலக அளவில் அதிக உயிரிழப்பை சந்தித்த முதல் நாடாக அமெரிக்கா இருந்து வருகிறது.

இந்நிலையில் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தற்போது 42 லட்சத்தை கடந்துள்ளது. உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான உயிர்களை பலிவாங்கி வரும் கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க பல்வேறு நாடுகளும் முயற்சித்து வருகின்றன. இந்நிலையில் உலகம் முழுவதும், 62 நாடுகளில் 5349 கொரோனா மாதிரிகளை சோதனை செய்த விஞ்ஞானிகள் அதன் மரபணுவில் இரண்டு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதையும், இதன் காரணமாக ஸ்பைக் புரதம் தன்னை உருமாற்றிக்கொண்டுள்ளதையும் கண்டுபிடித்துள்ளனர்.

கொரோனா வைரசின் ஸ்பைக் புரதத்தின் தற்போதைய வடிவத்தின் அடிப்படையிலேயே உலகம் முழுவதும் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், ஸ்பைக் புரதம் தன்னை உருமாற்றிக்கொள்வது, அந்த தடுப்பு மருந்துகளை பயனற்றதாக மாற்றி விடும் என்று விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். இதனால், உருமாற்றம் நடைபெறாத வைரஸ்களுக்கு எதிராக மட்டுமே தடுப்பு மருந்துகள் வேலை செய்யும் நிலை ஏற்படலாம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மனித உடலில் கொரோனா என்ன செய்யும்?

வாய், மூக்கு மற்றும் கண்களின் வழியாக மனித உடலுக்குள் நுழையும் கொரோனா வைரஸ், ஸ்பைக் என்று அழைக்கப்படும் கொக்கி போன்ற புரதத்தின் மூலம் மனித செல்களோடு இணைகிறது. இந்த இணைவு வெற்றிகரமாக நடந்தவுடன், வைரஸ் தனது மரபணுவை மனித செல்களுக்குள் புகுத்தும். மனித செல்களுக்குள் நுழையும், கொரோனாவின் மரபணு, அந்த செல்லை வைரசின் இனப்பெருக்க தளமாக மாற்றுகிறது.

இப்போது பாதிக்கப்பட்ட செல், ஒரு வைரசாகவே மாறி, பல்கிப்பெருகிறது. பொதுவாக வைரசுக்கு எதிராக செலுத்தப்படும் தடுப்பு மருந்து, வைரசின் ஸ்பைக் புரதம் குறித் தகவலை உடலுக்கு அளிக்கிறது. அதனால், தடுப்பு மருந்து செலுத்தப்பட்டவர்களின் உடலுக்குள் வைரஸ் நுழையும் போது ஸ்பைக் புரதத்தை அடையாளம் கண்டு, மனித செல்கள் அதனுடன் இணைவதை தவிர்க்கின்றன.

Tags : researchers , Coronavirus, vaccine, researchers
× RELATED லண்டனில் ஆழ்கடலில்...