×

அந்தமான் அருகே வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை 48 மணி நேரத்தில் மேலும் வலுவடையும் : வானிலை ஆய்வு மையம்

சென்னை: அந்தமான் அருகே வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது என்றும் அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை மேலும் வலுவடையும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் அடுத்த 48 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில்,

தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, கடலூர், விழுப்புரம், அரியலூர் ஆகிய  மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய,லேசான மற்றும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. கன்னியாகுமரி மற்றும் நாகப்பட்டினத்தில் ஓரிரு இடங்களில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய,கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதர மாவட்டங்கள் மற்றும் பாண்டிச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும். தெற்கு அந்தமான், தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் பூமத்தியரேகை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40-50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். அதனால் மீனவர்கள் இப்பகுதிக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம்.

தமிழகத்தில் வேலூர், திருச்சி, கரூர், சேலம், தருமபுரி ஆகிய மாவட்டங்கள் மற்றும் திருத்தணியிலும்  அதிகபட்ச வெப்பநிலை 104  டிகிரி பாரன்ஹீட்டை ஒட்டி பதிவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே அடுத்து வரும் மூன்று நாட்களுக்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்களும் முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை திறந்தவெளியில் வேலை செய்வதைத்  தவிர்க்க வேண்டும். சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்ஷியஸும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்ஷியஸும் ஒட்டி இருக்கும், எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக குமரி மாவட்டம் பேச்சிப்பாறையில் 4 செமீ மழையும் ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியில் 3 செமீ மழையும் பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : Meteorological Department ,Bay of Bengal ,Andamans ,Andamann , Andaman, Bay of Bengal, Kasparov level, become stronger, meteorological
× RELATED வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த...