கொரோனா ஊரடங்கால் நிறுத்தப்பட்ட போடி அகலரயில் பாதை பணி மீண்டும் தொடக்கம்

ஆண்டிபட்டி: கொரோனா ஊரடங்கால் நிறுத்தப்பட்ட மதுரை - போடி அகல ரயில் பாதை அமைக்கும் பணிகள் மீண்டும் தொடங்கியுள்ளதால், ஆண்டிபட்டி பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மதுரையில் இருந்து தேனி மாவட்டத்தில் உள்ள போடிக்கு கடந்த 2009 வரை பயணிகள் ரயில் இயக்கப்பட்டது. இந்த ரயில் மூலம் தமிழகத்தின் எல்லைப்பகுதிகள், கேரளாவில் உள்ள இடுக்கி மாவட்டத்தில் விளையும் ஏலக்காய், காபி, தேயிலை ஆகிய பொருட்களை மதுரைக்கு கொண்டு சென்றனர். இந்நிலையில், மதுரை - போடி மீட்டர்கேஜ் பாதையை, அகல ரயில் பாதையாக மாற்றுவதற்காக கடந்த 2010ல் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. போதிய நிதி ஒதுக்கீடு இல்லாமல் சில ஆண்டுகள் பணிகள் கிடப்பில் போடப்பட்டன.

 பின்னர் 2 ஆண்டுகளாக அகல ரயில் பாதை பணிகள் தீவிரமாக நடந்தன. முதற்கட்டமாக மதுரையிலிருந்து உசிலம்பட்டி வரை சுமார் 43 கிமீ தூரம் பணிகள் முடிக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. உசிலம்பட்டியிலிருந்து போடி வரையிலான அகல ரயில்பாதை அமைக்கும் பணி நடந்து வந்த நிலையில், கொரோனா ஊரடங்கால் மார்ச் 25 முதல் பணிகள் நிறுத்தப்பட்டன. தற்போது ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டதால் 48 நாட்களுக்கு பின், ஆண்டிபட்டி கணவாய் மலைப்பகுதியில் இருந்து ஆண்டிபட்டி வரை அகல ரயில்பாதை அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. ரயில் தண்டவாளம் அமைப்பதற்காக மண்ணை கொட்டி சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. மேலும், ஓரிரு நாளில் கணவாய் மலைப்பகுதியில், மலைகளை குடைந்து பாதை அமைக்கும் பணிகள் தொடங்க உள்ளதாக தெரிவித்துள்ளனர். மீண்டும் ரயில் பாதை பணிகள் தொடங்கியுள்ளதால், இப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories:

>