×

ஊரடங்கால் வெளிமாநில விற்பனை ‘கட்’ பிளம்ஸ்க்கு போதிய விலை இல்லை: கொடைக்கானல் விவசாயிகள் கவலை

கொடைக்கானல்: கொடைக்கானலில் பிளம்ஸ் சீசன் ஆரம்பித்தும் ஊரடங்கால் வெளிமாநிலங்களுக்கு அனுப்ப முடியவில்லை. உள்ளூரிலும் போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். கொடைக்கானல் மலைப்பகுதியில் விளையக்கூடிய பிரதான பழங்களில் பிளம்ஸ் பழமும் ஒன்று. ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் பிளம்ஸ் அறுவடை இருக்கும். இந்த ஆண்டு மே மாத துவக்கத்தில்தான் அறுவடை துவங்கியது. விளைச்சல் ஓரளவு இருந்தும், விலை குறைவாக கிடைப்பதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.கொடைக்கானலில் விளையக்கூடிய பிளம்ஸ் பழங்களுக்கு, வெளிமாநிலங்களில் நல்ல விலை கிடைக்கும். தற்போது கொரோனா ஊரடங்கு உத்தரவால், வெளிமாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்ப முடியவில்லை. ஒரு சில கேரள வியாபாரிகள் மட்டும் கொடைக்கானலுக்கு அனுமதிக்கப்பட்டு அவர்கள் மட்டும் பிளம்ஸ் பழங்களை வாங்கி செல்கின்றனர்.

 இதனால் போதிய விலை கிடைக்காமல் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். பிளம்ஸ் விவசாயிகள் கூறுகையில், ‘‘கொடைக்கானலில் மே மாதம் குளுகுளு சீசன் களைகட்டும் காலக்கட்டத்தில் பிளம்ஸ் பழங்கள் விற்பனை அமோகமாக இருக்கும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா தடுப்பு ஊரடங்கால் கொடைக்கானலுக்கு சுற்றுலாப்பயணிகள் வருகை இல்லாமல் போய் விட்டது. இதனால் பிளம்ஸ் பழங்கள் கிலோ ரூ.80 முதல் ரூ.120 வரை விற்கப்பட்டும் வாங்க ஆளில்லை. வெளியூருக்கு அனுப்ப முடியாமல் போனதால் உள்ளூரில் குறைந்த விலைக்கு விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்’’ என்றனர்.



Tags : Kodaikanal , price , vegetables declined , Rs. 80 per kg
× RELATED கொடைக்கானலில் குடியிருப்புக்குள் புகுந்தது காட்டு மாடுகள்