×

கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் தாலி கயிறு உற்பத்தியாளர்கள்

உடுமலை: கொரோனா ஊரடங்கு காரணமாக உடுமலையில் தாலி கயிறு உற்பத்தியாளர்கள் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர். கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் வகையில் மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மே 17ம் தேதி வரை இது அமலில் உள்ளது. இதனால் அனைத்து பெரிய, சிறு, குறு தொழில் நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள், கடைகள், மால்கள் பாதிப்படைந்துள்ளன. அந்த தொழில் நிறுவனத்தினர் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர். திருப்பூர் மாவட்டம் உடுமலை வரதராஜபுரத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தாலி மஞ்சள் கயிறு தயாரித்து வருகின்றனர். கடந்த 45 நாட்களுக்கும் மேலாக தொடரும் ஊரடங்கால், திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. இதனால் தாலி கயிறு விற்பனை பாதிக்கப்பட்டு இதை உற்பத்தி செய்பவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தாலி கயிறு உற்பத்தியாளர்கள் கூறியதாவது: தமிழ்நாட்டிலேயே இந்த கிராமத்தில் மட்டும்தான் தாலி கயிறு தயாரித்து வருகிறோம். வெளி மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் தாலி கயிறு அனுப்புகிறோம். திருப்பதி மற்றும் மதுரை, பழனி, திருச்சி, கும்பகோணம், தஞ்சை, மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் உட்பட தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோயில்களுக்கும் இங்கிருந்துதான் தாலி கயிறு செல்கிறது. தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 45 நாட்களாக உற்பத்தி செய்த தாலி கயிற்றை எங்கும் அனுப்ப முடியவில்லை. தயாரிக்க இப்போது பாவும் கிடைப்பதில்லை. இதனால் எந்த ஒரு வருமானமும் இல்லாமல் உள்ளோம். கோயில்களை திறந்தால்தான் எங்களுக்கு வாழ்வாதாரம் கிடைக்கும். கைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கியதுபோல் எங்களுக்கும் அரசு நிவாரணம் வழங்க வேண்டும். அரசியல் கட்சிகள் சார்பில் எங்கள் கிராமத்தில் எந்த உதவியும் வழங்கப்படவில்லை. சிறப்பு நிதி ரூ.5 ஆயிரம் உடனடியாக வழங்க வேண்டும்.

சோமனூரில் இருந்து கழிவு பஞ்சை வாங்கி தயாரிக்கிறோம். நூல் கிலோ 50 ரூபாய் இருந்தது. தற்போது ரூ.80ஐ தாண்டிவிட்டது. விசைத்தறியும் ஓடவில்லை. இதனால் நூலும் தட்டுப்பாடாக உள்ளது. 140 கயிறு கொண்ட பாக்கெட் ரூ.80 என்ற குறைந்த லாபத்தில்தான் விற்கிறோம். பஞ்சு வாங்கி, பாவு தயாரித்து, நூலாக்கி, வண்ணமிடுதல் பணிக்கு குறைந்தது 6 நாட்களாகி விடும். ஊரடங்கு காரணமாக தற்போது தொழிலாளர்களும் வேலைக்கு வரமுடியவில்லை. இதனால் அவர்களின் குடும்பமும் பாதிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு தொடர்ந்தால் பட்டினி கிடக்கும் நிலைதான் ஏற்படும். குழந்தைகளுக்கான பள்ளி கட்டணம் செலுத்தவும் வழியில்லை. எனவே, அரசு இந்த தொழிலை செய்ய அனுமதிக்க வேண்டும். விதிமுறைகளை பின்பற்றி முக கவசம் அணிந்து, உரிய மனித இடைவெளிவிட்டு பணியாற்ற முடியும். இதனால் வருமானம் இழந்து தவிக்கும் குடும்பங்களில் மகிழ்ச்சி ஏற்படும். இதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். உற்பத்தியாளர்களுக்கு மட்டுமின்றி, தொழிலாளர்களுக்கும் கொரோனா நிவாரண பொருட்கள், உதவித்தொகை வழங்க வேண்டும். முக்கியமாக தொழில் செய்ய அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Tags : Corona ,thali rope manufacturers , Corona curling ,livelihoods , thali rope manufacturers
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...