×

வேலூர் கலெக்டர் அலுவலகம் எதிரே சாலையோரம் தான் இந்த கூத்து ஊரடங்கை பயன்படுத்தி 10 நாட்களில் ஆக்கிரமித்து கட்டி எழுப்பிய 2 வீடுகள்: போலீஸ் பாதுகாப்புடன் நடந்ததாக புகார்

வேலூர்: வேலூர் கலெக்டர் அலுவலகம் எதிரே சாலையோரம் ஆக்கிரமித்து, ஊரடங்கை பயன்படுத்தி 10 நாட்களில் 2 வீடுகள் கட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. கொரோனா பரவாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து பணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. அதன்படி கட்டுமான பணிகள் பாதியிலேயே கைவிடப்பட்டன. தற்போது ஊரடங்கு உத்தரவில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு விதிமுறைகளுக்கு உட்பட்டு கட்டிட பணிகள் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஊரடங்கு உத்தரவு நாட்களிலும் மறைமுகமாக ஒரு சில கட்டிட பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக புகார்கள் எழுந்துள்ளது.
இதேபோல் வேலூர் கலெக்டர் அலுவலகம் எதிரே, டான்சி நிறுவனம் சுற்றுச்சுவரையொட்டி நெடுஞ்சாலையோரம் மர்ம நபர்கள் அரசுக்கு சொந்தமான பெரிய இடத்தை ஆக்கிரமித்து 2 வீடுகளை கட்டியுள்ளனர். ஊரடங்கின்போது 10 நாட்களில் ஹாலோ பிளாக் கற்களை பயன்படுத்தி கட்டி எழுப்பப்பட்டுள்ள வீடுகளை பார்த்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தற்போது 2 வீடுகள் கட்டப்பட்டுள்ள இந்த பகுதியில்தான் ஊரடங்கு உத்தரவை கண்காணிக்க தற்காலிக போலீஸ் செக்போஸ்டும் போடப்பட்டிருந்தது. இதனால் போலீஸ் பாதுகாப்புடன்தான் இந்த ஆக்கிரமிப்பு கட்டிட பணிகள் நடந்திருக்க வாய்ப்புள்ளதாக பொதுமக்கள் மத்தியில் புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘ஊரடங்கு உத்தரவு நாட்களில் எந்தவித பணிகளும் மேற்கொள்ள வேண்டாம் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால் காகிதப்பட்டறையில் உள்ள டான்சி நிறுவனம் அருகே சாலையோரத்தில் ஹாலோ பிளாக் கற்களை பயன்படுத்தி 10 நாட்களில் மிகப்பெரிய 2 கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. இந்த பகுதியில்தான் ஊரடங்கு உத்தரவை மீறி சுற்றித்திரியும் வாகனங்களை பிடிக்க, தற்காலிக போலீஸ் செக்போஸ்டும் அமைக்கப்பட்டிருந்தது.

இந்த செக்போஸ்ட்டை மீறி கட்டிட பணிக்கு தேவையான ஆட்கள், பொருட்கள் சென்றிருக்க வாய்ப்பில்லை. இதனால் போலீஸ் பாதுகாப்புடன்தான் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. ஆக்கிரமிப்பு செய்துள்ள சாலையோர பகுதி மலையடிவாரம் என்பதால் மரங்கள் மற்றும் செடி, கொடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளன. அதன் பின்பக்கம் தகடுகளால் இடத்தை முழுமையாக மறைத்து கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.  இதன் அருகிலேயே மேலும் பல ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் எழுப்ப பலர் இடம் பிடித்து வருகின்றனர். இந்த ஆக்கிரமிப்பு இடங்களில் ஒரு பகுதி வேலூர் மாநகராட்சி மற்றும் வனத்துறை கட்டுப்பாட்டில் வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் அரசுக்கு சொந்தமான இடத்தில் வரிசையாய் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் முளைத்துவிடும் என்பதுடன், எதிர்காலத்தில் இயற்கை சீற்றம் ஏற்பட்டால் உயிரிழப்புகளும் ஏற்படலாம்’ என்று அச்சம் தெரிவித்தனர்.

Tags : collector ,Vellore ,houses ,Vellore Collector , Vellore Collector's Office , roadside 2 houses,have been built, curfew in 10 days.
× RELATED வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே...