×

டி.பி.சத்திரம் காவலர் குடியிருப்பில் தடையின்றி நடந்த மது விற்பனையை தடுக்க சென்ற ரோந்து காவலரை தாக்கிய உளவு போலீசார்

* மோதல் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்

சென்னை: கொரோனா தடுப்பு காரணமாக மார்ச் 24ம் தேதி முதல் மாநிலம் முழுவதும் ஊரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகள்  மூடப்பட்டதால் சில இடங்களில் கள்ளச்சந்தையில் மது சர்வ சாதாரணமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அப்படி கள்ளச்சந்தையில் விற்பனை செய்யும் நபர்களை கைது செய்ய போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி டி.பி.சத்திரம் காவலர் குடியிருப்பில் கள்ளச்சந்தையில் சிலர் மது விற்பனை செய்வதாக டி.பி.சத்திரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ஒருவர் டி.பி.சத்திரம் காவலர் குடியிருப்புக்கு சென்று மது விற்பனை செய்த நபர்களை பிடிக்க முயன்றார். அப்போது பல ஆண்டுகளாக உளவு பிரிவில் காவலர்களாக உள்ள இரண்டு போலீசார், மது விற்பனை செய்யும் நபர்களை கைது செய்ய கூடாது என்று கூறி தடுக்க வந்த ரோந்து காவலரை சுற்றி வளைத்து கடுமையாக தாக்கினர்.

இதனால் அதிர்ச்சியடைந்த காவலர் தாக்குதலில் வலி தாங்க முடியாமல் அங்கிருந்து செல்ல முயன்றார். ஆனாலும் உளவு பிரிவு காவலர்கள் விடாமல் காவலரை துரத்து துரத்தி அடித்தனர். இந்த சம்பவத்தை காவலர் குடியிருப்பில் உள்ள சக காவலர்கள் தங்களது செல்போனில் பதிவு செய்தனர். தாக்குதல் சம்பவத்தில் படுகாயமடைந்த ரோந்து காவலர் சம்பவம் குறித்து உயர் அதிகாரிகளிடம் தெரிவித்தார். அதன்படி உயர் போலீசார் சம்பந்தப்பட்ட இரண்டு  உளவு பிரிவு காவலர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் போலீசாரிடையே வைரலாக பரவி வருகிறது. அதே நேரம் சட்டத்தை பாதுகாக்க வேண்டிய போலீசாரே கள்ளச்சந்தையில் மது வாங்கி அதுவும் காவலர் குடியிருப்பில் விற்பனை செய்து வந்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Spy police attack patrolman ,liquor Spy police attack patrolman , DB Chatram Police Quarters, Liquor Sales, Patrol Guard, Intelligence Police
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...