×

திருப்பதி கோயிலில் 90% பேருக்கு பணம் திருப்பி தரப்பட்டது: தலைமை செயல் அலுவலர் தகவல்

திருமலை: திருப்பதி கோயிலில் பல்வேறு சேவைகளில் பங்கேற்க முன்பதிவு செய்த பக்தர்களில் 90 சதவீதம் பேருக்கு பணம் திரும்ப வழங்கப்பட்டுள்ளது என்று தலைமை செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் தெரிவித்தார். திருப்பதியில் உள்ள தேவஸ்தான நிர்வாக அலுவலகத்தில் தலைமை செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் நேற்று காணொலிக் காட்சி மூலம் தகவல் தொழில்நுட்ப அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது: கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக மத்திய, மாநில அரசு நிபந்தனைகளின் படி மார்ச் 14ம் தேதி முதல் மே 31ம் தேதி வரையிலான ஏழுமலையான் கோயிலில் நடைபெறும் சேவைகள் ரத்து செய்யப்பட்டது. இதற்காக முன்பதிவு பக்தர்கள்  பணத்தை திரும்ப பெறுவதற்காக 45 சதவீதம் பேர் தங்கள் வங்கிக் கணக்கு விவரங்களை வழங்கியுள்ளனர்.

 அவர்களில் மொத்தம் 2,50,503 பேர் பணத்தை திரும்ப வழங்க வேண்டும் என கேட்டுள்ளனர். அதில் 90 சதவீதம் 1,93,580 பக்தர்களுக்கு டிக்கெட்டிற்கான பணம் வங்கியில் செலுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு தளர்வு செய்யப்பட்ட பிறகு மீண்டும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகள் செய்வது குறித்து விரிவான ஆலோசனைகள் மேற்கொள்ள வேண்டும். பொறியியல் மற்றும் பிற துறைகளில் காகிதமற்ற பில்களை உருவாக்கவும், காகித பயன்பாடு 50 சதவீதம் குறைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.



Tags : Tirupati Temple ,Chief Executive Officer , Tirupati Temple, Money and Chief Executive Officer
× RELATED திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க...