×

மாணவர் குறைகளை தீர்க்க தனிப் பிரிவு: பல்கலை.களுக்கு யூஜிசி உத்தரவு

புதுடெல்லி: நாடு தழுவிய அளவிலான ஊரடங்கு காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டு இருப்பதால் தேர்வுகள், கல்வி தொடர்பாக மாணவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்கள், குறைகளை தீர்ப்பதற்காக தனிப்பிரிவை தொடங்கும்படி பல்கலைக் கழகங்களை யூஜிசி கேட்டுக் கொண்டுள்ளது. கொரோனா  வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஒன்றாக கடந்த மார்ச் 16ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து அடுத்தடுத்து ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக கல்லூரிகளில் இறுதி பருவத்தேர்வுகள் நடைபெறாமல் தடைபட்டது. இந்நிலையில் வருகிற ஜூலையில் மாணவர்களுக்கான பருவத்தேர்வு நடைபெறும் என பல்கலைக்கழக மானிய குழு அறிவித்துள்ளது.

மேலும், ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை தொடங்கும் என்றும் செப்டம்பரில் வகுப்புக்கள் தொடங்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், பல்கலைக்கழக மானிய குழுவின் செயலாளர் ராஜ்னிஸ் ஜெயின் கூறியதாவது:  பல்கலைக் கழகங்களுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வழிகாட்டுதல்களில் அனைத்து பல்கலைக் கழகங்களும் மாணவர்களின் பாதுகாப்பையும், ஆர்வத்தையும் கருத்தில் கொண்டு கல்வி ஆண்டிற்கான செயல்பாடுகளை திட்டங்களை  தயாரிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது. புதிய வழிகாட்டுதல்களை ஏற்றுக்கொண்டு செயல்படுத்தும்போது சம்பந்தப்பட்ட அனைவரின் ஆரோக்கியத்திற்கும் முன்னுரிமை அளிக்கப்படவேண்டும்.

கொரோனா நோய் தொற்று எதிரொலியாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதால் தேர்வுகள் மற்றும் கல்வி நடவடிக்கைகள் தொடர்பாக மாணவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை தீர்க்கவும், அவர்களின் குறைகளை தீர்க்கவும் தனிப் பிரிவை பல்கலைக்கழகங்கள் தொடங்க வேண்டும். இது குறித்து மாணவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். மாணவர்கள் தங்களது குறைகளை யூஜிசி.யின் தனிப்பிரிவிலும் தெரியப்படுத்தலாம். மாணவர்கள், ஆசிரியர்கள், மற்றும் கல்வி நிறுவனங்களின் குறைகளை கேட்டறியவும், அவற்றை சரிசெய்யவும் சிறப்பு குழுவை யூஜிசி அமைத்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags : universities , Student grievances, separate section, university, UGC
× RELATED CUET முதுநிலை தேர்வு முடிவுகளை வெளியிட்டது தேசிய தேர்வுகள் முகமை..!!