×

இந்திய நாட்டு எல்லையில் அமைதியை நிலை நாட்டவே ராணுவத்தை நிறுத்தியுள்ளோம்: சீனா புது விளக்கம்

பீஜிங்: இந்தியா-சீனா எல்லைப் பகுதிகளில் அமைதி, ஸ்திரத்தன்மையை நிலைநாட்டவே தங்களது படைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக சீனாதெரிவித்துள்ளது. இந்திய-சீனப் படைகள் கடந்த 5ம் தேதி கிழக்கு லடாக்கில் உள்ள பான்காங் ஏரி பகுதியில் மோதி கொண்டன. இரு தரப்பிலும் 200க்கும் அதிகமான வீர‍ர்கள் கல்வீச்சு தாக்குதலில் ஈடுபட்டனர்.  அதே போல, சிக்கிமில் நாகுலா சந்தி பகுதியில் 150க்கும் மேற்பட்ட இந்திய-சீன வீர‍ர்கள் மோதிக் கொண்டனர். இதில் 10க்கும் மேற்பட்ட வீர‍ர்கள் காயமடைந்தனர். இந்நிலையில், சீன வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் ஜாவோ லிஜியான் பீஜிங்கில் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:

எல்லை விவகாரத்தில் இந்தியா-சீனா மிக நெருக்கமான தகவல் தொடர்பு மற்றும் ஒருங்கிணைப்பில் உள்ளன. இந்தாண்டு இந்தியா-சீனா இடையிலான தூதரக உறவு தொடங்கியதன் 70ம் ஆண்டில் இருக்கிறோம். இது போன்ற தருணங்களில் இரு தரப்பினரும் வேறுபாட்டை மறந்து எல்லைப் பகுதியில் அமைதி, ஸ்திரத்தன்மையை நிலை நிறுத்த முயற்சிக்க வேண்டும். இதன் மூலம் கோவிட்-19க்கு எதிரான போரில் இருநாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும். கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் இந்தியா-சீனா இணைந்து செயல்படுகின்றன. உலக நாடுகளும் ஒருங்கிணைந்த ஒத்துழைப்பை வலியுறுத்தி உள்ளன.

இந்நேரத்தில் அரசியல் மயமாக்குதலையோ அல்லது களங்கப்படுத்தும் முயற்சியையோ மேற்கொள்ள கூடாது. இந்தியா-சீனா எல்லைப் பிரச்சினையை பொறுத்தவரை எங்களது நிலைப்பாடு தெளிவாகவும் சீராகவும் உள்ளது. சீனப் படைகள் எல்லையில் எப்போதும் அமைதி, ஸ்திரத்தன்மையை நிலை நிறுத்தி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.



Tags : China ,military ,border ,Indian , Indian border, China border
× RELATED தென் சீன கடலுக்கு பயணம்: 3 இந்திய போர் கப்பல்கள் சிங்கப்பூர் சென்றடைந்தன