×

13 ஆயிரம் கோடி வங்கி கடன் மோசடி: நீரவ் மோடியை நாடு கடத்தும் வழக்கு லண்டனில் விசாரணை தொடங்கியது

லண்டன்:  பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் பெற்று திருப்பி செலுத்தாமல் மோசடி செய்த வழக்கில் நீரவ் மோடியை நாடு கடத்துவது தொடர்பான வழக்கு விசாரணை லண்டன் நீதிமன்றத்தில் நேற்று தொடங்கியது. மும்பையை சேர்ந்த வைர வியாபாரி நீரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13 ஆயிரம் கோடி கடன் பெற்று, அதனை திருப்பி செலுத்தாமல் இங்கிலாந்து தப்பி சென்றார். இதனை தொடர்ந்து நீரவ் மோடி மீது சிபிஐ, அமலாக்கத் துறை, வருமான வரித் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தியாவில் இருந்த அவரது சொத்துக்கள் முடக்கப்பட்டன.

மேலும், இங்கிலாந்தில் தஞ்சமடைந்த நீரவ் மோடியை நாடு கடத்தக்கோரி இந்தியா சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு மார்ச் 19ம் தேதி ஸ்காட்லாந்து யார்டு போலீசார் நீரவ் மோடியை கைது செய்தனர். அவரது ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து அவர் வாண்ட்ஸ்வொர்த் சிறையில் அடைக்கப்பட்டார். 5வது முறையாக கடந்த மாதமும் ஜாமீன் கேட்டு அவர் விண்ணப்பித்து இருந்தார். ஆனால், நீதிமன்றம் ஜாமீன் மனுவை நிராகரித்து விட்டது. இந்நிலையில், நீரவ் மோடியை நாடு கடத்தும் வழக்கு தொடர்பான 5 நாள் விசாரணை லண்டன் நீதிமன்றத்தில் நேற்று தொடங்கியது.

விசாரணைக்காக நீரவ் மோடி நேரில் ஆஜர்படுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் உள்ளிட்ட காரணங்களால் நேரில் ஆஜர்படுத்துவது சாத்தியம் இல்லாதபட்சத்தில் நீரவ் மோடி வீடியோ கான்பரன்சிங் மூலமாக சிறையில் இருந்தே ஆஜர்படுத்தப்பட்டு விசாரணை நடத்தப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, கடந்த 28ம் தேதி விசாரணையின் போது, ‘சில சிறைச்சாலைகள் கைதிகளை நேரில் ஆஜர்படுத்துகின்றன. எனவே, வாண்ட்ஸ்வொர்த் சிறைச்சாலை நீரவ் மோடியை 11ம் தேதி நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் அதற்கு சாத்தியமில்லாதபட்சத்தில் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக ஆஜர்படுத்தலாம்,’ என நீதிபதி கூஸி குறிப்பிட்டிருந்தார்.



Tags : investigation ,Nirav Modi , Bank loan fraud, Neerav Modi, deportation case, London
× RELATED திருவல்லிக்கேணி பகுதிகளில் பைக்கில்...