×

கொரோனா இருக்கு... இல்லை.. ஆனா இருக்கு...மூதாட்டி மரணத்தில் முரண்பட்ட சான்றிதழ் வழங்கிய மருத்துவமனை: உறவினர்கள் அதிர்ச்சி

சென்னை: சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், அரசு மருத்துவமனைகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. இதனால், இட நெருக்கடி காரணமாக ஏற்கனவே சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டவர்கள் நோய் அறிகுறி இல்லை எனக்கூறி தனிமை வார்டுகளுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர். இவ்வாறு தனிமை வார்டுக்கு அனுப்பப்பட்டவர்களில் 3 பேர் நேற்று முன்தினம் திடீரென இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நோய் தொற்று அதிகரிப்பு காரணமாக மருத்துவமனை நிர்வாகங்கள் பல்வேறு காரணங்களை கூறி நோய் பாதிப்பு உள்ளவர்களை திருப்பி அனுப்புவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில், சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையிலும் அப்படி ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த ஒரு மூதாட்டி சமீபத்தில் இறந்தார். இவருக்கு வைரஸ் நெகடிவ், பாசிடிவ் என மாறி மாறி சான்றிதழ் வழங்கியது தெரியவந்துள்ளது. புளியந்தோப்பு தட்டாங்குளம் காட்டூர் நல்லமுத்து ஆசாரி தெருவை சேர்ந்தவர் பாப்பம்மாள் (78) என்பவருக்கு கடந்த 2ம் தேதி உடல்நிலை பாதிக்கப்பட்டு ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கடந்த 6ம் தேதி இவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த பாப்பம்மாள் கடந்த 9ம் தேதி இரவு இறந்தார்.

இதையடுத்து, மருத்துவமனை நிர்வாகம் வழங்கிய சான்றிதழில், பாப்பம்மாவுக்கு  கொரோனா தொற்று இல்லை,  என சான்றிதழ் வழங்கினர். இரவு நேரம் என்பதால், மறுநாள் அதாவது நேற்று முன்தினம் உடலை பெற்றுக்கொள்வதாக கூறிவிட்டு உறவினர்கள் சென்றனர். அதன்படி சென்றபோது காலையிலிருந்து மாலை வரை அலைகழித்து மாலை 6 மணிக்கு நீங்கள் உடலை எடுத்து செல்லலாம்,   என சான்றிதழ் வழங்கியுள்ளனர். மாலை 6 மணிக்கு மேல் சுடுகாட்டில் தகனம் செய்ய முடியாத காரணத்தால் மறுநாள் அதாவது நேற்று உடலை எடுத்துச் செல்கிறோம் என்று கூறி விட்டு உறவினர்கள் வீட்டிற்கு வந்துவிட்டனர். பின்னர், நேற்று காலை பாப்பம்மாவின் உடலை வாங்க சென்றபோது உடலை வீட்டிற்கு எடுத்து செல்ல முடியாது. ஏனென்றால் அவருக்கு கொரோனா பாசிட்டிவ் என தற்போது மருத்துவ சான்று வந்துள்ளது.   எனவே நேராக சுடுகாட்டிற்கு மாநகராட்சி அதிகாரிகளுடன்  சென்று உடலை தகனம் செய்ய வேண்டும் என கூறியுள்ளனர்.

 இதனால் அதிர்ந்து போன உறவினர்கள் வேறு வழியின்றி மாநகராட்சி அதிகாரிகளுடன் சென்று ஓட்டேரி மயானத்தில்  அவரது  உடலை எரித்தனர்.   உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு முதல் தடவை பரிசோதனையில் பாசிட்டிவ்  எனவும், இறந்தவுடன் கொரோனா  இல்லை எனவும், உடலை பெற்றுக்கொள்ள வரும்போது, கொரோனா உள்ளது எனவும் மாறி மாறி கடந்த பத்து நாட்களில்  மூன்று விதமான அறிக்கைகளை மருத்துவமனை நிர்வாகம் வழங்கி உள்ளது, அந்த குடும்பத்தினரிடையே  மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.  மேலும் தற்போது கொரோனா வேகமாக பரவி வருவதால் இந்த விவகாரத்தில் பல உண்மைகளை சுகாதாரத்துறை மூடி மறைப்பாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

Tags : Corona ,hospital ,Ana ,death ,elder ,relatives ,godmother , Corona, grandparents death, certificate, hospital, relatives
× RELATED ‘ஐசியு’ நோயாளிகளின் மனநலனை...