×

முன் தேதியிட்டு விற்கப்படும் ஆவின் பால்: காய்ச்சும்போது கெட்டுப்போகும் அவலம்

சென்னை: சென்னையில் முன் தேதியிட்டு விற்பனை செய்யப்படும் ஆவின் பால் பாக்கெட்களை வாங்கி சென்றால், காய்ச்சும்போது கெட்டுப்போவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.  சென்னை மாதவரத்தில் உள்ள ஆவின் பால் பண்ணையில் இருந்து தினமும் லட்சக்கணக்கான பால் பாக்கெட்கள் உற்பத்தி செய்யப்பட்டு சென்னை முழுவதும் இரவு நேரங்களில் ஆவின் பார்லர்கள், முகவர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும் திருச்சி, புதுக்கோட்டை, சேலம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் செல்கிறது. இந்நிலையில், மாதவரம் ஆவின் பால் நிறுவனத்தில் வேலை செய்யும் 8 தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மற்ற தொழிலாளர்கள் பணிக்கு வர தயங்குவதால் கடந்த ஒரு வார உற்பத்தி பாதித்து, காலமாக பால் தாமதமாக விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

சென்னையின் பல்வேறு பகுதிகளில் ஆவின் சமன்படுத்தப்பட்ட பால் விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் மதுரை, திருச்சி, சேலம், விழுப்புரம், வேலூர் மாவட்டங்களில் இருந்து கொண்டு வந்து சென்னையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதாவது பல்வேறு மாவட்டங்களில் இருந்து பாக்கெட்டில் பால் அடைப்பதற்கு முன்பாக அடுத்த நாள் தேதியிட்டு முதல் நாளே பேக்கிங் செய்யப்பட்ட பாலை சென்னைக்கு கொண்டு வந்து விநியோகம் செய்கின்றனர். இந்த கோடை காலத்தில் அவை விரைவில் கெட்டுப் போகிறது என்று ஏற்கனவே பால் முகவர்கள் மற்றும் பொதுமக்கள் குற்றச்சாட்டினர்.

இந்நிலையில் மாதவரம், அம்பத்தூர், சோழிங்கநல்லூர் ஆவின் பால் பண்ணைகளின் முகவரி கொண்ட கவரில், சேலம் மாவட்ட ஆவின் பால் பண்ணையில் பேக்கிங் செய்யப்பட்டு நேற்று சென்னையில் பால் விற்பனை செய்யப்பட்டது. இதில், 11ம் தேதிக்கு சேலம் மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு வந்த ஆவின் நிலைப்படுத்தப்பட்ட (பச்சை கவர்) பால் எனவும், முன் தேதியிட்டு 12ம் தேதி என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது.  இந்த பாலை வாங்கி சென்ற பொதுமக்கள் காய்ச்சும்போது கெட்டுப்போனதாக குற்றம் சாட்டியுள்ளனர். இந்த பால் கடந்த 9ம் இரவு அல்லது 10ம் தேதி காலையில் பேக்கிங் செய்திருக்க வேண்டும்.

இவ்வாறு முன் தேதியிட்டு பால் விற்பனை செய்யப்படுவதால் சீக்கிரமாக கெட்டுப்போய் விடுகிறது. இதேப்போல்,  கடந்த இரண்டு, மூன்று நாட்களாக கடைகளில் வாங்கப்படும் ஆவின் பால் பாக்கெட் விரைவில் கெட்டுவிடுகிறது என்று பொதுமக்கள் மற்றும் சில்லறை வணிகர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.



Tags : Aavin , Aavin Milk,chennai,corona
× RELATED ‘அமுல்’ நிறுவனம் பால் விற்பனையை...