×

கொரோனா தொற்று பீதியால் வெளிநாடு சென்று படிக்க தயங்கும் இந்திய மாணவர்கள்: விண்ணப்பித்தவர்களில் 60 சதவீதம் பேர் ரத்து

புதுடெல்லி: இந்திய மாணவர்கள் பலர் வெளிநாடு சென்று படிப்பதை தங்களது கனவாக கொண்டுள்ளனர். இதெல்லாம் கொரோனா வைரஸ் தொற்று உலகத்தை ஆட்டிப்படைக்கும் முன்பு வரைதான். தற்போது பிளஸ் 2 முடித்த மாணவர்கள் பலர் இங்கிலாந்து, கனடா போன்ற வெளிநாடுகளில் படிக்க விண்ணப்பித்திருந்த நிலையில் அந்த முடிவை மாற்றிக் கொண்டுள்ளனர். இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு சென்று படிப்பதற்காக செல்பவர்களில் 70  சதவீதம் பேர் பட்டமேற்படிப்பு படிக்க செல்கின்றனர்.  ஆனால், இதில் பெரும்பாலானோர்  இந்த ஆண்டு மேற்படிப்பு படிக்க செல்வதை ஒத்திவைத்துள்ளனர். இந்தியாவிலேயே படிக்கவும் விரும்புகின்றனர்.

இது தொடர்பாக அமெரிக்காவில் உள்ள ஈஒய் பார்தினோன் தொழில்நுட்ப பூங்காவை சேர்ந்த கல்வி நிபுணர் அமிதாப் ஜிங்கன் கூறுகையில், ‘‘வெளிநாடுகளில் உள்ள கல்லூரிகளில் படிக்க வழக்கமாக செப்டம்பரில் அட்மிஷன் நடைபெறும். இதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு ஏப்ரல், மே மாதத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் 3.25 லட்சம் இந்திய மாணவர்கள் உலகம் முழுவதும் உள்ள கல்லூரிகளில் படிக்கின்றனர். இதற்காக ஒவ்வொரு ஆண்டும் வெளிநாடுகளுக்கு ஒரு லட்சம் இந்தியர்கள் செல்கின்றனர். இந்த ஆண்டு கொரோனா பீதியால் 50 முதல் 60 சதவீதம் பேர் வெளிநாடு சென்று படிக்கும் திட்டத்தை கைவிட்டுள்ளனர்,’’ என்றார்.  

டெக்னோ பார்க் அமைப்பின் தலைவர் சலோனி நாங்கியா கூறுகையில், `‘சர்வதேச பல்கலைக் கழகங்களில் இந்தியர்கள் படிக்க விரும்புவதற்கு அந்த கல்லூரிகள் ஆன்லைன் வகுப்புகளை நடத்துகின்றன என்பதும், வசந்த காலத்தில் வகுப்புகள் தொடங்குவதும் மற்றொரு காரணம். ஆனால், கொரோனா பாதிப்பு எத்தனை நாட்கள் நீடிக்கும் என்பதை உறுதியாக கூற முடியாததால் பலர் வெளிநாட்டில் படிக்கும் திட்டத்தை தள்ளிவைத்துள்ளனர்,’ என்றார்.  

ஏற்கனவே இங்கிலாந்து,  கனடா கல்லூரிக்கு விண்ணப்பித்த கொல்கத்தா சால்ட் ஏரி பகுதி மாணவர் வைபவ் லகோதியா கூறுகையில், `‘நிதி, வர்த்தக பொருளாதாரம் என்ற பட்டப்படிப்பு படிக்க விண்ணப்பித்தேன். கொரோனாவால்  நான் வெளிநாடு செல்வதை எனது பெற்றோர் விரும்பவில்லை. இதை ரத்து செய்து விட்டு தற்போது மும்பை,  பெங்களூரூ கிறிஸ்ட் பல்கலைக் கழகத்தில் படிக்க விண்ணப்பித்துள்ளேன்,’ என்றார். 


Tags : Indian ,applicants , Corona, Abroad, Native Students, Application
× RELATED கடும் வெயில் காரணமாக தமிழகத்துக்கு...