×

சீனாவில் இருந்து இந்தியாவுக்கு இடம் மாறுகிறது ஐபோன் உற்பத்தி: ஆப்பிள் நிறுவனம் திட்டம்

புதுடெல்லி: சீனாவில் உள்ள ஐபோன் உற்பத்தி செய்து வரும் ஆப்பிள் நிறுவனம், அதில் 5ல் ஒரு பகுதி உற்பத்தியை இந்தியாவில் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.  கொரோனா பரவலுக்கு பிறகு சீனாவில் உள்ள வெளிநாட்டு நிறுவனங்கள், பிற நாடுகளுக்கு இடம்பெயர திட்டமிட்டு வருகின்றன. இதனால் இந்தியாவில் முதலீடு மற்றும் உற்பத்திக்கு அதிக வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.   இதற்கேற்ப, சீனாவில் பெரிய அளவில் ஐபோன் உற்பத்தி செய்து வரும் ஆப்பிள் நிறுவனம், இந்தியாவில் அவற்றை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:  இந்தியாவில் உள்ள நிறுவனங்களுடன் ஆப்பிள் நிறுவனம் ஏற்கெனவே ஒப்பந்த அடிப்படையில் ஐபோன்களை தயாரித்து வருகிறது.

இந்த நிலையில், சீனாவில் இருந்து பெரிய அளவில் உற்பத்தியை இடம் மாற்ற முடிவு செய்துள்ளது. இது குறித்து தொடர்ந்து பல பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன. இது சாத்தியமானால், இந்தியாவில் இருந்து அதிக ஏற்றுமதி செய்யும் நிறுவனமாக ஐபோன் நிறுவனம் திகழும்.  ஏற்கெனவே இந்தியாவில் உற்பத்தி தொடர்பாக பாக்ஸ்கான், விஸ்ட்ரான் ஆகிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ள ஆப்பிள் நிறுவனம், அதே நிறுவனங்களுடன் கூடுதல் உற்பத்திக்கான ஒப்பந்தத்தை மேற்கொள்ளும் எனவும், இதன்படி, அடுத்த 5 ஆண்டுகளில் 4,000 கோடி டாலர் (சுமார் ₹3,04,000 கோடி) மதிப்பிலான ஐபோன்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு, உற்பத்தி அடிப்படையிலான ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் அமலில் உள்ளது. ஆனால், ஐபோன் முதலீட்டை கருத்தில் கொண்டு இந்த திட்டத்தில் மத்திய அரசு சில மாற்றங்களை செய்ய வேண்டி வரலாம். கொரோனா வைரஸ் பரவல் மட்டுமின்றி, சீனா - அமெரிக்கா இடையிலான மோதலும் ஆப்பிள் நிறுவனத்தின் இந்த முடிவுக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது என்றனர்.



Tags : India ,China ,Apple , China, India, iPhone, Apple
× RELATED ஐபோன் கேமரா தயாரிக்க தமிழக நிறுவனத்துடன் பேச்சு!!