×

சிறு தொழில்களை மீட்கும் வகையில் நிதியுதவி அறிவிப்பு இந்த வாரம் வருமா? மத்திய அரசு திட்டம்

புதுடெல்லி: சிறு, குறு தொழில்கள் மற்றும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு நிதிச்சலுகை, ஊக்கத்தொகை திட்டங்களை மத்திய அரசு இந்த வாரத்திலேயே அறிவிக்கலாம் என தெரிகிறது. இதற்கான ஆலோசனைகள் நடந்து வருவதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.  கொரோனா பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கால், தொழில்துறைகள் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளன. உற்பத்தி முடங்கிக்கிடக்கிறது. அதிலும், சிறு, குறு தொழில் நிறுவனங்களின் நிலை படு மோசமாக உள்ளது. கடந்த மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட பிறகு, 26ம் தேதி 1.7 லட்சம் கோடி மதிப்பிலான நிதியுதவி திட்டங்களை மத்திய அரசு அறிவித்தது. இதன்பிறகு, ரிசர்வ் வங்கியும் கடன் சலுகைகள் உட்பட சில அறிவிப்புகளை வெளியிட்டது.

இந்த நிலையில், 3வது முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், 2வது நிதியுதவி திட்டத்தை மத்திய அரசு அறிவிக்க திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:  கொரோனா பரவலால் பாதிக்கப்பட்டுள்ள தொழில்துறைகள், நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களுக்காக நிதி திட்டங்களை மத்திய அரசு ஏற்கெனவே அறிவித்தது. தற்போது 2வது நிதியுதவி திட்டத்தை அறிவிக்க முடிவு செய்துள்ளது. இதில் முதல் கட்டமாக, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கும், புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் இந்த வாரத்திலேயே அறிவிப்பு வெளியாகலாம். இதன்பிறகு, சேவைகள் துறைக்கு நிதியுதவி திட்டம் விரைவில் அறிவிக்கப்படும்.

குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அடமானம் இன்றி கடன் பெறுவதை உறுதி செய்யும் வகையிலும், இது தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பிரதமருடனும், நிதியமைச்சக அதிகாரிகளுடன் தொடர்ந்து ஆலோசனைகள் நடத்தி வருகிறார். நிதிபற்றாக்குறை உள்ளதால், நடப்பு நிதியாண்டில் கடன் வாங்கும் இலக்கை 7.8 லட்சம் கோடியில் இருந்து 12 லட்சம் கோடியாக உயர்த்தியுள்ளது. நிதியுதவி திட்டத்தையும் கருத்தில் கொண்டுதான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கடன் வாங்குதல் மற்றும் நிதி திரட்டுவதற்கு ஏற்ப நிதியுதவி அறிவிப்பு இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : funding announcement ,businesses , Small businesses, financing, central government
× RELATED சிறு வணிகர்களுக்கான வணிக வரி சமாதான...