×

மாமல்லபுரத்தில் ஊரடங்கு விதிமீறியதால் காதல் ஜோடி தங்கிய விடுதிக்கு சீல்: போலீசார் வழக்குப்பதிவு

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் ஊரடங்கின்போது தடையை மீறி காதல் ஜோடிகளை தங்க வைத்த விடுதிக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும், ஜோடிகள், விடுதி உரிமையாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். நாடு முழுவதும் ஊரடங்கு வரும் 17ம் தேதி வரை அமலில் உள்ளது. இதனால், பொதுமக்கள் சமூக விலகலை கடைபிடிக்கும் வகையில் மாமல்லபுரத்தில் உள்ள தங்கும் விடுதிகள் திறக்க அரசு இன்னும் அனுமதி வழங்கவில்லை. இந்நிலையில், மாமல்லபுரம் திருக்குள தெருவில் உள்ள ஒரு தனியார் விடுதியில் நேற்று ஊரடங்கு தடையை மீறி இரண்டு காதல் ஜோடிகள் தங்க அறை வழங்கப்பட்டுள்ளது.

தகவலறிந்த மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவேல்முருகன், எஸ்ஐ சதாசிவம் அந்த விடுதிக்கு சென்று சோதனை செய்தனர். அப்போது, இரண்டு அறைகளில் காதல் ஜோடிகள் இருப்பது தெரியவந்தது. அவர்களை, காவல் நிலையம் அழைத்து வந்து ஊரடங்கு தடையை மீறி சுற்றியதாகவும், சட்டத்திற்கு புறம்பாக விடுதியில் தங்கியதாகவும், காதல் ஜோடிகள் நான்கு பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

மேலும், ஊரடங்கு தடையை மீறி விடுதி திறந்து செயல்பட்டதாக அதன் உரிமையாளர் குப்புசாமி (65) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். விடுதிக்கும் திருக்கழுக்குன்றம் தாசில்தார் தங்கராஜ் உத்தரவின் பேரில், மாமல்லபுரம் வருவாய் ஆய்வாளர் ஜேம்ஸ் மற்றும் வருவாய்த்துறையினர் பூட்டு போட்டு சீல் வைத்தனர். இதுகுறித்து மாமல்லபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Tags : Mamallapuram , Mamallapuram, curfew, romantic couple, hostel, seal, police, case record
× RELATED வீட்டை விட்டு மகன் விரட்டியதால் மண் சோறு சாப்பிட்டு தம்பதி போராட்டம்