×

இன்று முதல் 15 நகரங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம் வைரஸ் அறிகுறி இல்லாதவர்களுக்கு மட்டுமே பயணம் செய்ய அனுமதி

புதுடெல்லி: கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் கடந்த மார்ச் 25ம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அன்றிலிருந்து பஸ், ரயில், விமானம் போன்ற பொது போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. வெளி மாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்புவதற்கான சிறப்பு ரயில்களும், சரக்கு ரயில்களும் மட்டும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், 45 நாள் தடைக்குப் பிறகு, பயணிகள் ரயில் சேவையை படிப்படியாக மீண்டும் தொடங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக டெல்லியில் இருந்து சென்னை, பெங்களூரு உட்பட 15 நகரங்களுக்கு இன்று முதல் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இதில் பயணம் செய்வதற்கான டிக்கெட் ஆன்லைனில் மட்டுமே முன்பதிவு செய்யப்படும். நேற்று மாலை 4 மணிக்கு டிக்கெட் முன்பதிவு தொடங்கியது. இருப்பினும், சர்வரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பல மணி நேரம் முன்பதிவு பாதிக்கப்பட்டது. இதனால், மக்கள் அதிகம் சிரமப்பட்டனர்.

இந்நிலையில், இந்த சிறப்பு ரயிலில் பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன் விவரம்::
* ரயில் நிலையத்திற்குள் நுழையும் போதும், பயணத்தின் போதும் பயணிகள் அனைவரும் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும். சமூக இடைவெளியை பராமரிக்க வேண்டும்.
* உறுதிபடுத்தப்பட்ட இ-டிக்கெட் வைத்துள்ள பயணிகள் மட்டுமே ரயில் நிலையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
* ரயில் நிலைய நுழைவாயிலில் அனைத்து பயணிகளுக்கும் வைரஸ் அறிகுறி பரிசோதனை மேற்கொள்ளப்படும். இதில், அறிகுறியற்றவர்கள் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்படுவர்.
* அனைத்து பயணிகளுக்கும் ரயில் நிலையத்திலும், ரயில் பெட்டியிலும் சானிடைசர் வழங்கப்பட வேண்டும்.
* சிறப்பு ரயில் மூலம் பிற ஊர்களை சென்றடையும் பயணிகள் அந்தந்த மாநில அரசுகளின் விதிமுறைகளுக்கு கட்டுப்பட வேண்டும்.
* அனைவரும் பயண நேரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக ரயில் நிலையத்திற்கு வர வேண்டும்.

புலம் பெயர்ந்தோருக்காக தினசரி 100 ரயில்கள் இயக்கம்
புலம் பெயர்ந்த வெளி மாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களை சென்றடைவதை விரைவுபடுத்த தினசரி 100 ரயில்கள் இயக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மே 1ம் தேதி முதல் இதுவரை 468 சிராமிக் சிறப்பு ரயில்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து இயக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 5 லட்சம் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு பயணப்பட்டுள்ளனர். இதுவரை 363 ரயில்கள் அந்தந்த ஊர்களை சென்றடைந்துள்ளன. 100 ரயில்கள் தொடர்ந்து பயணத்தை மேற்கொண்டு வருகின்றன. சிராமிக் சிறப்பு ரயில்களில் சமூக இடைவெளியை பராமரிக்க, ஒரு பெட்டிக்கு 72 பேருக்கு பதிலாக 54 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.

7 நாட்களுக்கு முன் முன்பதிவு
* டெல்லியில் இருந்து முக்கிய நகரங்களுக்கு ராஜ்தானி வழித்தடத்தில் இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் அனைத்தும் முழுக்க குளிர்சாதன வசதி கொண்டவை.
* பயணிகளுக்கு தலையணை, பெட்ஷீட் எதுவும் வழங்கப்படாது.
* அடைக்கப்பட்ட உணவுகள் மட்டுமே வழங்கப்படும்.
* இந்த ரயில்களுக்கு இனி 7 நாட்களுக்கு முன்பாக முன்பதிவு செய்யலாம்.
* ரயில் புறப்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பாக டிக்கெட்டை ரத்து செய்யலாம். இதற்கு டிக்கெட் கட்டணத்தில் 50 சதவீதம் பிடித்தம் செய்யப்படும்.

Tags : cities , Corona, special trains, curfew
× RELATED இந்தியாவிலேயே அதிகபட்ச வெப்பநிலை...