×

கொரோனா பேரிடர் காலத்தில் திமுகவின் உதவிகள் அனைத்து தரப்பு மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது: மு‌.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: பேரிடர் காலத்தில் திமுக மேற்கொண்டுள்ள உதவிப் பணிகள், அனைத்துத்தரப்பு மக்களிடமும் நம்பிக்கையை உண்டாக்கியுள்ளது. என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக  தலைவர் மு‌.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:மத்திய - மாநில அரசுகளே கொரோனா நோய்த் தொற்று குறித்து விழிப்படைவதற்கு முன்பாகவே கொளத்தூர் தொகுதியில் உள்ளவர்களுக்குத் தேவையான முகக்கவசங்கள், கை கழுவும் கரைசல் உள்ளிட்டவை அடங்கிய மருத்துவப் பெட்டகத்தை தி.மு.க.,வின் சார்பில் வழங்கினேன். ‘முன் ஏர் செல்லும் வழியில் மற்ற ஏர்களும் தொடர்ந்து வருவதைப் போல’’, திமுக எம்எல்ஏக்கள் அவரவர் தொகுதிகளில் இதுபோன்ற தற்பாதுகாப்புப் பெட்டகங்களைப் பொதுமக்களுக்கு வழங்கினர். திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களும் காலத்தே களப்பணியில் இறங்கி, மக்களுக்குத் துணை நின்றனர்.
 
களத்தில் திமுகவினர் ஆற்றுகின்ற அயர்விலாப் பணிகள் குறித்து அவ்வப்போது காணொலி வாயிலாக உரையாடி, ஆலோசனைகள் தெரிவித்து வந்ததுடன், ஊரடங்கு காலத்தில் வேலையிழந்து தவிப்போரின் வீடுகளில் உலை வைக்க முடியாத நிலையினை நினைத்து, அவர்களுக்கு உணவுப் பொருட்களையும், உணவுப் பொட்டலங்களையும் வழங்கிடவும் வலியுறுத்தினேன். சென்னையில் கொளத்தூர், சைதாப்பேட்டை உள்ளிட்ட இடங்களுக்கு  நேரில் சென்றும் உதவிகளை வழங்கினேன். எங்கெல்லாம் தமிழர்கள் இருக்கிறார்களோ அங்கெல்லாம் உதவிட “ஒன்றிணைவோம் வா” பயன்பட்டது. தமிழகத்தில் தவித்த பிற மாநில தொழிலாளர்களுக்கும் இத்திட்டத்தின் மூலம் உதவிகள் செய்யப்பட்டன. செயல்திட்டம் தொடங்கப்பட்ட நான்கைந்து நாட்களிலேயே 2 லட்சத்துக்கும் மேற்பட்ட அழைப்புகள்.

அனைத்தையும் பரிசீலித்து, எந்தெந்த பகுதிகளிலிருந்து உதவி கோரப்படுகிறதோ, அந்த மாவட்டக் கழகச் செயலாளருக்கு அதுகுறித்த விவரம் அறிவிக்கப்பட்டது. அழைப்புகள் குவிந்த அளவுக்கு நிகராக, உதவிகளும் நிறைவாகச்  செய்யப்பட்டன. ‘நல்லோர் கூடம்’ வாயிலாக சமூக அக்கறையுள்ள தன்னார்வலர்கள் பலரும்  கழகத்தின் உதவிப்பணிகளில் இணைந்து செயல்படத் தொடங்கினர்.  திமுக நிர்வாகிகளிடம்  வெளிமாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் பரிதவிக்கின்ற தமிழர்கள் குறித்தும், அங்குள்ளோரிடம் காணொலி வாயிலாகக் கேட்டறிந்தேன். கோவை கணபதியை அடுத்த சங்கனூர் பகுதியில் தவித்து வந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 57 தொழிலாளர்கள், திமுகவின் மாநிலங்களவை உறுப்பினர்  வில்சன் அவர்கள் எடுத்த பெரும் முயற்சியால், சொந்த ஊர்களுக்கு பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.  

வில்சன் அவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க, கோவை மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர், எம்எல்ஏ கார்த்திக், அங்கிருந்த ஒடிசா மாநிலத் தொழிலாளர்களுக்கு மூன்று வேளைக்குத் தேவையான உணவுகளை வழங்கவும், கழகத் தோழர்களின் ஒத்துழைப்புடன் ஏற்பாடு செய்தார். இதற்காக அந்தத் தொழிலாளர்கள் நன்றி தெரிவித்த போது நெகிழ்ச்சியால் என் நெஞ்சம் விம்மியது. பேரிடர் காலத்தில் திமுக மேற்கொண்டுள்ள உதவிப் பணிகள்,  அனைத்துத்தரப்பு மக்களிடமும் நம்பிக்கையை உண்டாக்கியுள்ளது.

 திமுக தொண்டர்களை, ‘’உடுப்பு அணியாத பட்டாளத்தினர்’’ என்றார் கழகத்தை நிறுவிய பேரறிஞர் அண்ணா. சீருடை அணியாவிட்டாலும் ராணுவத்தினரைப் போன்ற கட்டுப்பாட்டுடனும், கடமையுணர்ச்சியுடனும், பேரிடர் காலத்தில் உதவி கோருபவர்களின் அழைப்புக்குச் செவிமடுத்து, அவர்களின் தேவையறிந்து உதவிடும் உடன்பிறப்புகள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியைக் காணிக்கை ஆக்குகிறேன். தொடர்ந்து சிறக்கட்டும் நமது மக்கள் பணிகள். களத்தில் காலமெல்லாம் துணையிருப்பேன் உங்களில் ஒருவனாக. இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.



Tags : DMK ,MK Stalin ,disaster ,parties ,Coronation , Corona, DM, MK Stalin, letter
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...