×

கொரோனா ஊரடங்கால் முடங்கிய தமிழ் சினிமா பணி 52 நாளுக்கு பின் நேற்று மீண்டும் தொடங்கியது

சென்னை: இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக தேசிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் இந்தியா முழுவதும் அனைத்து மொழி திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் முடங்கியதை தொடர்ந்து பல்லாயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது.  தமிழ் படவுலகில் கடந்த மார்ச் 19ம் தேதி தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் என்ற பெப்சி அமைப்பு அறிவிப்பின்படி சினிமா மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகளும், இறுதிக்கட்ட பணிகளும் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால், பல்லாயிரம் சினிமா தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு இல்லாமல், வாழ்வாதாரம் இழந்து தவித்தனர்.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன் தமிழகத்தில் குறிப்பிட்ட சில தொழில்துறையினருக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் மீண்டும் தொழில் தொடங்க தமிழக அரசு அனுமதி அளித்தது. இதை தொடர்ந்து பெப்சி அமைப்பு மற்றும் திரைப்பட தயாரிப்பாளர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து, சினிமா மற்றும் சின்னத்திரை இறுதிக்கட்ட பணிகள் தொடங்க அனுமதி கேட்டனர். இதை பரிசீலித்த தமிழக அரசு, நேற்று (மே 11) முதல் இறுதிக்கட்ட பணிகளுக்கு மட்டும் நிபந்தனைகளுடன் கூடிய அனுமதி வழங்கியது.  இதையடுத்து, 52 நாட்கள் முடக்கத்திற்கு பிறகு நேற்று முதல் தமிழ் சினிமா இறுதிக்கட்ட பணிகள் தொடங்கப்பட்டன.

இதுகுறித்து பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி கூறியதாவது: ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன் 2’ படத்தின் எடிட்டிங் பணிகள் இரண்டு இடங்களில் நடந்து வருகிறது. விஷால் நடித்த ‘சக்ரா’ படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளது. திரிஷா நடிக்கும் ‘ராங்கி’ படத்தின் கிராபிக்ஸ் பணிகள், சிபிராஜ் நடிக்கும் ‘கபடதாரி’ படத்தின் டப்பிங் பணிகள் மற்றும் சில சின்னத்திரை தொடர்களின் டப்பிங் பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகள் அனைத்துமே கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் அரசாங்கம் அறிவுறுத்திய நிபந்தனைகளுடன், குறிப்பிட்ட பணியாளர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து பணிபுரிந்து வருகின்றனர். விரைவில் தமிழ் சினிமா சுமூக. நிலைக்கு மாறும் என்று நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Tamil ,Corona ,Tamil Cinema , Corona, curfew, Tamil cinema
× RELATED கொரோனாவால் 4 ஆண்டு நிறுத்தப்பட்ட...