×

நலவாரிய சேமிப்பு கோடிக்கணக்கில் இருந்து என்ன பயன்? வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் 3 லட்சம் ஆட்டோ தொழிலாளர்கள்:

* அன்றாட உணவுக்கே அல்லாடும் குடும்பங்கள்

நெல்லை: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் 24 முதல் போடப்பட்ட ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் அனைத்து தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் அன்றாடம் ஆட்டோ ஓட்டி பிழைத்து வரும் ஆட்டோ டிரைவர்கள் மாமூல் வாழ்க்கையை இது மொத்தமாக முடக்கியது.  தமிழகத்தில் பெர்மிட் அடிப்படையில் 2 லட்சத்து 85 ஆயிரம் ஆட்டோக்கள் இயங்கி வருகின்றன. கடந்த 45 தினங்களில் அனைத்து ஆட்டோக்களுமே வீட்டுக்குள் முடங்கி விட்டன. கொரோனா நிவாரணம் ஆயிரம் ரூபாயை ஆட்டோ தொழிலாளர்களுக்கும் சேர்த்தே அரசு அறிவித்தது. ஆனால் 20 ஆயிரம் ஆட்டோ தொழிலாளர்கள் மட்டுமே நலவாரியத்தில் பதிவு செய்திருந்தனர். அவர்களுக்கும்  முழுமையாக இன்று வரை நிவாரணம் போய் சேரவில்லை.

இந்நிலையில் ஆட்டோ டிரைவர்களின் குடும்பத்தினர்  அனுதினமும் உணவுக்கே  போராட்டம் நடத்த வேண்டியதுள்ளது. இதுகுறித்து நெல்லை மாவட்ட சிஐடியு ஆட்டோ ஓட்டுநர்கள் சங்க பொதுச்செயலாளர் முருகன் கூறுகையில், ‘‘நலவாரியத்தில் தற்போது கோடிக்கணக்கில் பணம் இருக்கும்போது, கொரோனா நிவாரணமாக தலா ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை. ஆனால் நடைமுறையில் அரசு ஒதுக்கிய ஆயிரம் ரூபாயைக் கூட, நலவாரியத்தில் பணம் போடவில்லை என அரசு அதிகாரிகள் தட்டி கழிக்கின்றனர். டாஸ்மாக் கடைகளை திறக்க உச்சநீதிமன்றம் வரை போராடுகிற அரசு, எங்கள் வாழ்வாதாரம் கருதி ஆட்டோக்களையும் இயக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’’ என்றார்.

கால் டாக்சிக்கு வெண்ணெய் ஆட்டோக்களுக்கு சுண்ணாம்பு
தமிழக அரசு சமீபத்தில் அறிவித்த ஊரடங்கு தளர்வு விஷயத்தில் கால் டாக்சியில் ஒரு நபரை மட்டுமே ஏற்றிச் செல்ல வேண்டும் என அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் ஆட்டோக்களுக்கு அனுமதி தரப்படவில்லை.


Tags : auto workers , Livelihood, auto workers, corona, curfew
× RELATED பிரதமர் நிதிக்கு சீன நிறுவனங்களிடம்...