×

திருவெண்ணெய்நல்லூர் அருகே கொடூரம்: பள்ளி மாணவி பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை : அதிமுக நிர்வாகிகள் வெறிச்செயல்

திருவெண்ணெய்நல்லூர்: திருவெண்ணெய்நல்லூர் அருகே 15 வயது சிறுமி பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அதிமுக கட்சி நிர்வாகிகள் 2 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அடுத்த சிறுமதுரை கிராமத்தை சேர்ந்தவர் ஜெயபால். இவரது தம்பி குமாரின் கையை ஒரு தகராறில் 2013ல் அதே ஊரை சேர்ந்த முன்னாள் அதிமுக நிர்வாகி முருகையன், கலியபெருமாள் ஆகியோர் வெட்டினர். அதில் இருந்து இருவர் குடும்பத்துக்கும் இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்துள்ளது. இந்நிலையில் ஜெயபாலின் பெட்டிக் கடையில் நேற்று முன்தினம் காலை அவரது மகள் ஜெயஸ்ரீ (15) தனியாக வியாபாரத்தை கவனித்துக் கொண்டிருந்தார்.

அங்கு வந்த முருகையன் மற்றும் கலியபெருமாள் ஆகிய 2 பேரும் முன்விரோதத்தை மனதில் வைத்து ஜெயஸ்ரீயை அடித்து கை, கால்களை கட்டி வாயில் துணி வைத்து அடைத்து பெட்ரோல் ஊற்றி தீ வைத்துவிட்டு கடையின் கதவை வெளிப்புறமாக தாழிட்டுவிட்டு தப்பினர். சிறுமியின் அலறல் சத்தம்  கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து  சிறுமியை மீட்டு விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.  முன்னதாக சிறுமி கொடுத்த மரண வாக்குமூலத்தில், அதிமுக முன்னாள் கவுன்சிலர் முருகையன் மற்றும் அதிமுக கிளை செயலாளர் கலியபெருமாள் ஆகிய 2 பேரும் சேர்ந்து தன் மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலம் வாட்ஸ்அப்பில் வைரலாக பரவியது. பலர் இதனை பார்த்து கொதித்தனர்.

அதன் அடிப்படையில் முருகையன், கலியபெருமாள் ஆகியோரை போலீசார் கைது செய்து அவர்கள் மீது கொலை முயற்சி பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். நேற்று காலை சிறுமி இறந்தவுடன் அது கொலை வழக்காக மாற்றப்பட்டது. தகவலறிந்து மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். மேலும் தடய அறிவியல் உதவி இயக்குனர் சண்முகம் வரவழைக்கப்பட்டு சிறுமியை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய இடத்தில் தடயங்களை சேகரித்தனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட அதிமுக நிர்வாகிகள் 2 பேரையும் போலீசார் உளுந்தூர்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கலெக்டர் அறிக்கை அளிக்க உத்தரவு: சிறுமதுரை கிராமத்தை சேர்ந்த 10ம் வகுப்பு படித்து வந்த பள்ளி சிறுமி ஜெயஸ்ரீ எரித்து கொல்லப்பட்ட சம்பவம் குறித்து 7 நாட்களுக்குள் நடவடிக்கை எடுத்து அறிக்கை அளிக்க வேண்டும் என கலெக்டர் அண்ணாதுரைக்கு தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம்  உத்தரவு பிறப்பித்துள்ளது. திமுக நிதி உதவி: திமுக மத்திய மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சரும், திருக்கோவிலூர் எம்எல்ஏவுமான பொன்முடி நேரில் சென்று சிறுமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியதோடு, அவரது பெற்றோரிடம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் 50 ஆயிரம் நிவாரண நிதியை வழங்கினார்.

குடும்பத்துக்கு 5 லட்சம் நிதி முதல்வர் எடப்பாடி அறிவிப்பு
முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கை: தீ வைக்கப்பட்டதால் இறந்த சிறுமி ஜெயயின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.  இக்கொடூர செயலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை சட்டப்படி எடுக்கப்படும்.  சிறுமி ஜெயஸ்ரீயின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து  5 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளேன் என கூறியுள்ளார். இதற்கிடையில், கலியபெருமாள், முருகையன் ஆகிய இருவரையும் கட்சியில் இருந்து நீக்குவதாக, ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்துள்ளனர்.

Tags : Thiruvennayinallur ,AIADMK ,executives ,death ,Thiruvennainallur ,student , Thiruvennayinallur, schoolgirl, petrol, burnout, AIADMK executives
× RELATED ஒரு தொகுதி கிடைக்கும் என நம்பிக்கை...