சிறப்பு ரயிலுக்கான முன்பதிவில் முடங்கிய ஐஆர்சிடிசி இணைய தளம்; தொடங்கிய 10 நிமிடத்தில் விற்ற ஹவுரா - புது டெல்லி ரயில் டிக்கெட்கள்

டெல்லி: கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் பஸ், ரயில், விமான போக்குவரத்து கடந்த மார்ச் 25ம் தேதி முதல் நிறுத்தப்பட்டது. முழு ஊரடங்கால் சரக்கு ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வந்தன. இதுதவிர, வெளிமாநில தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. பயணிகள் ரயில் சேவை தொடர்ந்து நிறுத்தப்பட்டு இருந்தது. இந்நிலையில், ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் தற்போது பயணிகள் ரயில் சேவையை படிப்படியாக தொடங்க ரயில்வே முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக டெல்லியில் இருந்து 15 முக்கிய நகரங்களுக்கு நாளை முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக ரயில்வே நேற்று அறிவிப்பு வெளியிட்டது.

டெல்லியில் இருந்து சிறப்பு ரயில்கள் திப்ரூகர், அகர்தலா, ஹவுரா, பாட்னா, பிளாஸ்பூர், ராஞ்சி, புவனேஸ்வர், செகந்திராபாத், பெங்களூரு, சென்னை, திருவனந்தபுரம், மட்கோவான், மும்பை சென்ட்ரல், அகமதாபாத் மற்றும் ஜம்மு தாவி ஆகிய இடங்களுக்கு இயக்கப்படுகிறது. இந்த ரயில்களுக்கு முன்பதிவு இன்று மாலை 4 மணிக்கு தொடங்கியது. அதன்படி 15 முக்கிய நகரங்களுக்கு நாளை முதல் இயக்கப்படும் பயணிகள் சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியது. இந்நிலையில் தொடங்கிய சிறிது சிறிது நேரத்திலேயே IRCTC இணையதளம் முடங்கியது. இருப்பினும் IRCTC இணையதளம் மூலமாக மட்டுமே டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும் என்று மத்திய ரயில்வே அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

அதன்படி கோளாறு சரிசெய்யப்பட்டு இதற்கான முன்பதிவு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனையடுத்து சிறப்பு ரயில்களில் முன்பதிவு செய்ய நிறைய பேர் முயன்று வருவதால் ஐ.ஆர்.சி.டி.சி இணையதள சர்வர் முடங்கியுள்ளது. இதனையடுத்து இன்று மாலை 6 மணி அளவில் ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கும் எனவும் சிரமத்திற்கு வருந்துவதாகவும் ரயில்வே நிர்வாகம் தகவல் விளக்கம் அளித்தது. பின்பு சிறிது நேரத்தில் அனைத்து சிறப்பு ரயில்களுக்கான அட்டவணை வெளியிடப்பட்டது. பின் சிறிது நேரத்தில் ஐ.ஆர்.சி.டி.சி இணையதள சர்வர் சரியாக தொடங்கியது. தொடங்கிய 10 நிமிடத்தில் ஹவுரா-புது டெல்லி பாதையில் இயக்கப்படும் சிறப்பு ரயில்களுக்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்தது. மற்ற எல்லா வழித்தடங்களும், முதல் மணி நேரத்திலேயே ஏராளமான முன்பதிவு செய்யப்பட்டது.

சென்னை - டெல்லி

சென்னையில் சிறப்பு ரயில் நாளை காலை 6.35 மணிக்கு டில்லிக்கும், மறுமார்க்கத்தில் டில்லியில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புது டெல்லியில் இருந்து சென்னைக்கு வரும் 13ம் தேதி சிறப்பு ரயில் ஒன்று இயக்கப்படுகிறது. 15-ம் தேதி அதே ரயில் மீண்டும் டெல்லிக்குப் புறப்படுகிறது.

Related Stories:

>