×

ஆன்லைன் மனநல ஆலோசனையை தொடங்கியது அமெரிக்கா; மன அழுத்தத்திற்கு ஆளாகும் 50% கொரோனா நோயாளிகள்: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரி ஆய்வில் தகவல்

புதுடெல்லி: கொரோனா வைரசால் பாதிப்புக்கு ஆளானவர்களில் 50 சதவீதம் பேர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்படுவதாக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரி ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால், ஆன்லைன் மனநல ஆலோசனையை அமெரிக்கா போன்ற நாடுகள் தொடங்கி உள்ளன. புதுச்சேரி ஜவஹர்லால் நேரு இன்ஸ்டிடியூட் ஆப் முதுநிலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (ஜிப்மர்) வெளியிட்ட ஆய்வு கட்டுரை ஒன்று ஆசிய ஜர்னல் ஆஃப் சைக்கியாட்ரியில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், ‘உலக அளவில் பெரும் அழிவுக்கு ஒத்ததாக கருதப்படும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளான நோயாளிகள் மற்றும் பொது மக்கள் பலர் மனநல கோளாறுக்கு ஆளாகின்றனர்.

இதனால் ஸ்கிசோஃப்ரினியா, பித்து மற்றும் மனச்சோர்வு போன்றவை ஏற்பட்டு கடுமையான மனநோய்களை ஏற்படுத்துகிறது. இத்தகைய நோயாளிகள் சில நேரங்களில் மிகவும் உற்சாகமாக இருக்கிறார்கள். பின்னர் கட்டுப்பாடற்றவர்களாக இருக்கிறார்கள். தனியாக இருக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். அவர்கள் தாக்குதல், நாசவேலை போன்றவற்றில் ஈடுபடலாம்’ என்று தெரிவித்துள்ளது. இதுகுறித்து, லோஹியா இன்ஸ்டிடியூட்டின் நரம்பியல் அறுவை சிகிச்சை துறையின் தலைவர் டாக்டர் தீபக் சிங் கூறுகையில், ‘ஜிப்மர் மருத்துவமனையின் ஆய்வறிக்கையை தீவிரமாக எடுத்துக் கொண்ட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் அதற்கான ஆன்லைன் மனநல ஆலோசனையை உடனடியாக அமல்படுத்தத் தொடங்கியுள்ளன.

சமூகக் கோளாறின் தாக்கம் மேற்கத்திய நாடுகளிலேயே அதிகமாக இருப்பதால், விரைவில் அந்நாடுகள் முழுவதும் ஆன்லைன் மனநல ஆலோசனையைத் தொடங்க உள்ளன. சாமானிய மக்களைத் தவிர, இந்த நோய் சுகாதார ஊழியர்களையும் தாக்குகிறது. இது தூக்கத்தையும் அமைதியின்மையையும் அதிகரிக்கிறது. ஆய்வின்படி, கொரோனா பாசிடிவ் நோயாளிகளில் இந்த கோளாறு 28 முதல் 50 சதவீதம் வரை காணப்படுகிறது. அதே நேரத்தில், சுமார் 8 சதவீத நோயாளிகள் இதனால் கடுமையான மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர, கொரோனா தொற்று இல்லாதவர்கள், தங்களுக்கு எதிர்காலத்தில் நோய்த்தொற்று ஏற்படுமோ என்ற அச்சம் காரணமாக, எதிர்காலத்தைப் பற்றி அதிகம் கவலைப்படுகின்றனர்.

இந்த வகையில் 16 முதல் 28 சதவீதம் பேரிடம் இந்த நோய் காணப்படுகிறது’ என்று தெரிவித்துள்ளார். எனவே, உங்கள் அன்றாட வழக்கத்தை முன்பு போலவே வைத்திருங்கள். ஆர்வமுள்ள செயல்களில் கவனம் செலுத்துங்கள். சிரிக்க வைக்கும் நிகழ்ச்சிகளைப் பாருங்கள். எதிர்மறையாக சிந்திக்காதீர்கள். அதிகமாக தண்ணீரைக் குடிக்கலாம். மன அழுத்தமான செய்திகளிலிருந்து விலகி இருங்கள். தினசரி யோகா, தியான பயிற்சியில் ஈடுபடுங்கள். நடத்தை மாற்றம் மற்றும் மனச்சோர்வு அதிகரிக்கும் போது ஆலோசனை பெறுங்கள். கொரோனா இருந்தாலும், 95 சதவீதம் நோயாளிகள் வரை குணமடைகிறார்கள் என்று நினைத்துக் கொள்ளுங்கள். நீங்களும் ஆரோக்கியமாக இருப்பீர்கள் என்று ஆலோசனைகளும் வழங்கப்பட்டுள்ளது.

Tags : Puducherry ,Corona Patients ,US , Jipmer Medical College, Puducherry
× RELATED வரும் ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறப்பு : புதுச்சேரி அரசு அறிவிப்பு