×

கோபிசெட்டிப்பாளையம் சாலையில் அனாதையாக கிடந்த குழந்தை மீட்பு: பெற்றோர் குறித்து போலீசார் விசாரணை

கோபி: கோபிசெட்டிப்பாளையம் அரசு  மாணவியர் விடுதி முன்பு சாலையில் அனாதையாக கிடந்த பிறந்து இரண்டு நாட்களே ஆன ஆண்  குழந்தையை பொதுமக்கள் மீட்டு கோபி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த குழந்தையின் பெற்றோர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம்  அருகே உள்ள நாகர்பாளையம் சாலையில் அரசு மாணவியர் விடுதி உள்ளது. இந்த விடுதியில் இருந்த மாணவிகள் அனைவரும் கொரோனா தொற்று காரணமாக வீட்டிற்கு  அனுப்பப்பட்ட நிலையில், கடந்த 45 நாட்களாக விடுதி பூட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு விடுதி முன்பு குழந்தை அழும் சத்தம் கேட்டது.

இதை கேட்ட நல்ல கவுண்டன்பாளையத்தை சேர்ந்த பிரசாந்த்  என்பவர் அங்கு சென்ற போது, சாலையில் அழகான ஆண் குழந்தை இருப்பதை கண்டார். இதனை தொடர்ந்து அப்பகுதி மக்களுடன் சேர்ந்த குழந்தையை மீட்டு கோபி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். மருத்துவமனையில் குழந்தையை பரிசோதித்த போது பிறந்து இரண்டு நாட்கள் ஆனது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து மருத்துவர்கள் பச்சிளம் குழந்தைகள் வார்டில் வைத்து குழந்தையை பராமரித்து வருகின்றனர். குழந்தையின் பெற்றோர் யார்? என்பது குறித்து கோபி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விரைவில் குழந்தையின் தாயை கண்டுபிடித்து குழந்தை ஒப்படைக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

Tags : parents ,road ,Gopichettipalayam , Gopichettipalayam, child, rescue, police investigation
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி