×

சுங்கான்கடையில் பல லட்சம் ரூபாய் மதிப்பு மண்பாண்டங்கள் தேக்கம்

திங்கள்சந்தை: கன்னியாகுமரி மாவட்டம்  சுங்கான்கடையில் ஊரடங்கால் தேங்கிய பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மண்பாண்டங்கள்  கேரளாவிற்கு விற்பனைக்கு கொண்டு செல்ல முடியாததால் தேக்கம் ஏற்பட்டுள்ளது. ஊரடங்கு தளர்வை  எதிர்பார்த்து வருமானமின்றி காத்திருக்கும் 5000 க்கும் மேற்பட்ட மண்பாண்ட  தொழிலாளர்கள் ஜனவரி மாதம் கிடைக்க வேண்டிய ₹5000 மழைக்கால நிவாரணமும்  கிடைக்கவில்லை என வேதனை தெரிவித்தனர். கன்னியாகுமரி  மாவட்டத்தில் முக்கிய தொழில்களில் மண்பாண்ட தொழிலும் ஒன்று. மிகவும் நேர்த்தியாக கலை நுட்பத்துடன் இங்கு தயாராகும் மண்பாண்டங்களுக்கு கேரளா மாநிலத்தில் அதிக வரவேற்பு உள்ளது. இந்த மண்பாண்டங்கள் சுங்கான்கடை, மேக்காமண்டபம், தக்கலை உட்பட 17 ஊர்களில் தயாராகின்றன. குடிசை தொழிலான இந்த தொழிலை நம்பி 5000க்கும் மேற்பட்ட மண்பாண்ட தொழிலாளர்கள்  உள்ளனர். அன்றாடம் இவர்கள் தயாரிக்கும் மண்பாண்டங்கள் உள்ளூர் மட்டுமின்றி கேரளாவிற்கும் கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்படும்.

 மேலும் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகளும் இந்த மண்பாண்டங்களை அதிக அளவில் ஆர்வத்துடன் வாங்கி செல்வர். பொதுவாக  மண்பாண்டங்களின் தேவை கோடை காலம் மற்றும் கோடை விடுமுறையான ஏப்ரல், மே,  மாதத்தில் அதிகரித்து விற்பனை சூடுபிடிக்கும். தற்போது கொரோனா தடுப்பு  நடவடிக்கையால் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் மண்பாண்டங்களை  வெளியூர்களுக்கு எடுத்து செல்லவும் விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டது. கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக மண்பாண்ட குடிசை தொழில் கூட்டுறவு சங்கமும்  மூடபட்டதோடு விற்பனை கடைகளும் மூடப்பட்டது. இதனால் வாழ்வாதாரத்தை இழந்தனர்  மண்பாண்ட தொழிலாளர்கள். ஆனால் வீடுகளிலேயே மண்பாண்டம் உற்பத்தி செய்யும்  தொழிலாளர்கள் உற்பத்தியை தொடர்ந்து செய்து வந்தனர்.

ஆனால் வெளியூர், வெளி  மாநிலங்களுக்கு எடுத்து சென்று விற்பனை செய்ய முடியாததால் பல லட்சம் ரூபாய்   மதிப்பிலான மண்பாண்டங்கள் அவரவர் வீடுகளிலேயே தேங்கியுள்ளது. விற்பனை இல்லாமல்  மண்பாண்டங்கள் தேங்கியதால் உற்பத்தி செய்தும் வருமானம் இல்லாமல்   மண்பாண்ட தொழிலாளர்கள் வாடுகின்றனர். கேரளாவிற்கு விற்பனைக்கு கொண்டு சென்றால்தான்  வருமானம் என்ற நிலையில் உள்ளனர். வரும் 17ம் தேதிக்கு பிறகாவது ஊரடங்கில் தளர்வு  கிடைத்து வெளியூர் மற்றும் கேரளாவிற்கு கொண்டு சென்று விற்க வாகன  அனுமதியும் கிடைத்தால் தான் வருமானம் கிடைக்கும் என எதிர்பார்த்து  காத்திருக்கின்றனர்.  தற்போது வாழ்வாதாரம் இழந்த அவர்கள் கடந்த நவம்பர்,  டிசம்பர் மாத மழைக்கால நிவாரணமான 5000 ரூபாயாவது அரசு காலம் தாழ்த்தாமல்  வழங்கினால் தங்களுக்கு ஒரு மாத கால வாழ்வாதாரத்திற்கு உறுதுணையாக இருக்கும்  எனவும் அதையாவது உடனடியாக வழங்க வேண்டும் என்று வேதனையுடன் கோரிக்கை  விடுத்துள்ளனர்.

Tags : Many crores,pottery worth, Rs
× RELATED சேலத்தில் வெயிலின் கொடுமையை விளக்க...